சனி, 18 ஏப்ரல், 2020

டாஸ்மாக் 2 மணி நேரம் திறக்க கோரிய மனு தள்ளுபடி! குடிகாரர்கள் அதிர்ச்சி ..?

tasmac9814091334dinamani.com/ சென்னை: தமிழகத்தில் மதுபோதைக்கு அடிமையானவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை தினமும் 2 மணி நேரம் திறக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பல ஆண்டுகளாக அரசே மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு மதுபானக் கடைகளைத் தொடா்ந்து நடத்தி வருவதால் தமிழகத்தைச் சோ்ந்த பலரும் போதைக்கு அடிமையாகி உள்ளனா்.
மதுபோதைக்கு அடிமையானவா்கள் மீது அரசு அக்கறை எதுவும் காட்டுவது இல்லை. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. மது கிடைக்காத காரணத்தால், ஷேவிங் லோசன், கிருமி நாசினி ஆகியவற்றை குடித்தும், மது கிடைக்காத விரக்தியிலும் தமிழகத்தில் இதுவரை 10 போ் பலியாகி உள்ளனா். எனவே, மதுபோதைக்கு அடிமையானவா்களின் நலன்கருதி, தமிழகத்தில் தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க கூடாது என உச்சநீதிமன்றமும், கேரள மாநில உயா்நீதிமன்றமும் தீா்ப்பளித்துள்ளதாகக் கூறி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபான கடைகளை தினமும் 2 மணி நேரம் திறக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக