திங்கள், 6 ஏப்ரல், 2020

கொரோனா: விளக்கோடு சேர்ந்து வெடி கொழுத்தி .... பற்றி எரிந்த பகுதிகள் ...

மின்னம்பலம் : பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாட்டு மக்களிடையே கடந்த 2ஆம் தேதி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு, மக்கள் அனைவரும் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு வைக்க வேண்டும். அல்லது மொபைல் டார்ச், டார்ச் லைட்டை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு நாட்டின் பல நகரங்களில் மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள மின் விளக்குகளை அனைத்தனர். வீட்டு வாசல்களிலும், காம்பவுண்ட் சுவர்களிலும் அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். வீட்டின் பால்கனிகளில் நின்று மொபைல் டார்ச் அடித்து கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்பதைக் காட்டினர்.
ஜிப்பா, வேட்டி மற்றும் துண்டு அணிந்த பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் குத்து விளக்கு ஏற்றினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினரோடு மெழுகுவர்த்தி ஓளியேற்றினார்.

அதுபோலவே தெலங்கானா ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை குடும்பத்தினர் மற்றும் ராஜ்பவன் ஊழியர்களுடன் விளக்கு ஏற்றினார். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு நின்று விளக்கு ஏற்றி கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார்.
சில இடங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கோலம் வரைந்து அதில் அகல் விளக்குகளை ஏற்றினர். தாங்களும் கைகளில் விளக்கை ஏந்திக்கொண்டு வீட்டின் முன்பு நின்றனர். எனினும் பல சென்னை, மதுரை உள்ளிட்ட பல நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தனர்.இதுபோலவே வட மாநிலங்களில் பல இடங்களிலும் விளக்குகள் எரியவிட்டதோடு பட்டாசுகளும் வெடித்ததால், நகரம் புகை மண்டலம் சூழ காட்சியளித்தது. சில இடங்களில் விளக்குகளோடு கோ கொரோனா என்றபடி பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
எனினும், ஒரு சில பகுதிகள் மின் விளக்குகள் அணைக்கப்படவில்லை. அவர்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். 9- 9.09 மணி வரை மின் விளக்குகள் அணைக்கப்பட்டதால் கோவையில் சில இடங்களில் மின் அழுத்தம் அதிகரித்ததாகவும் குடியிருப்புவாசிகள் கூறினர்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக