சனி, 25 ஏப்ரல், 2020

சுத்திகரிப்பானை உடலில் செலுத்தினால் மோடியை மிஞ்சிய அபத்தம் டொனால்ட் ட்ரம்ப்

மின்னம்பலம்  :  கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பொறுப்புடன்
செயல்பட வேண்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நேற்றைய (ஏப்ரல் 24) செய்தியாளர்கள் சந்திப்பு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பொருட்களை, தரையைச் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பான் ஒரு நிமிடத்தில் கொரோனா வைரசை அழித்து விடுகிறது. அதுபோல் மனிதர்களின் உடலுக்குச் செய்ய ஏதாவது இருக்கிறதா? உடலில் ஊசி போல செலுத்துவதற்கு, உடலை சுத்தம் செய்வதற்கு அதுபோல ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும். உடலை சுத்திகரிக்கும் கிருமி நாசினி ஒன்றைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயல வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

அதிபரின் பேச்சால் அதிர்ச்சியடைந்துள்ள மருத்துவர்கள், சுகாதாரத் துறை அறிஞர்கள் எனப் பலரும் இதுபோன்ற ஒரு காரியத்தை யாரும் செய்துவிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் பால் ஹன்டர், இது குறித்துக் கூறும்போது இது மிகவும் அபாயகரமான முட்டாள்தனமான பேச்சு என்று கூறியுள்ளார். மேலும் ”சுத்திகரிப்பானை உடலில் செலுத்துவதால் கொரோனாவால் மரணமடைவதற்கு முன்பு அந்த சுத்திகரிப்பானால் மரணமடைந்து விடுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
டெட்டால் மற்றும் லைசால் ஆகிய சுத்திகரிப்பான் மற்றும் கிருமிநாசினிகள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரிக்கெட் இதுகுறித்து கூறும்போது, “சுத்திகரிப்பான்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த வகையிலும் அவை மனித உடலுக்குள் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டவை அல்ல” என எச்சரித்துள்ளார். மருத்துவர் வின் குப்தா, சுத்திகரிப்பானை உட்கொள்வது கிருமிகளை எப்போதும் கொல்லாது. மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிக அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக