வியாழன், 9 ஏப்ரல், 2020

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு

மாலைமலர் :தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
சென்னை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 690 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்


BBC  :
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் கட்டத்திலிருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயன்று வருவதாகவும் கூறினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வியாழக்கிழமை இரவுக்குள் கொரோனாவைச் சோதனை செய்வதற்காந 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடுமெனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சரிடம் ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தெரிவித்த முதல்வர், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்று தற்போது இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதும் இரண்டாம் கட்டத்திலேயே இதனைத் தடுத்துவைப்பதற்கான முயற்சியில் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக