செவ்வாய், 7 ஏப்ரல், 2020

எம்.எல்.ஏ.க்கள் நிதிக்கும் வேட்டு .. ரூ.1 கோடி பிடித்தம் செய்யப்படும் .. முதல்வர் அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி: அறிவித்த எடப்பாடிமின்னம்பலம் : எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி: அறிவித்த எடப்பாடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை அரசு பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டர் வாங்குவதற்கு முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 லட்சம் ஒதுக்கினார். ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று அவருக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்திருந்தார்.

தனது அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்டவர்களும் கரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுகிறார்கள் எனவும், நிதியைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் எனவும் தலைமைச் செயலாளருக்கு செந்தில்பாலாஜி கடிதம் எழுதினார். இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், “செந்தில்பாலாஜி ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதல்வர் கவனிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், விதிமுறைகளின்படி செய்ததை ஸ்டாலின் குறை கூறியுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 இலட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர்,
“இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக