செவ்வாய், 24 மார்ச், 2020

நாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. Karthikeyan Fastura

Karthikeyan Fastura : நடிகர் பார்த்திபன் இயக்கி 1999ல் வெளிவந்த படம்
ஹவுஸ்ஃபுல். மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் வாங்கிய இந்த திரைப்படத்தை இன்று பார்த்தாலும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
அன்று ஒரு பெரிய தியேட்டரில் பிரபலமான நடிகரின் படம் ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும். தியேட்டரில் தீவிரவாத கும்பல் ஒன்று பாம் வைத்து விடும். ஏற்கனவே நகரில் இரண்டு இடத்தில் பாம் வெடித்து மக்கள் பலர் இறந்திருப்பார்கள். ஆகவே இந்த முறை இந்த தியேட்டரில் இது நிகழ்ந்து விடக்கூடாது என போலீஸ் அதிகாரிகளும், பாம் ஸ்குவாட் அதிகாரிகளும் இணைந்து போராடிக் கொண்டிருப்பார்கள். அந்த தியேட்டரின் ஓனர் ஒரு பெரியவர் அவர் தியேட்டரில் பாம் என்றவுடன் பதறி விடுவார். அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அடிக்கடி சொல்லும் வார்த்தை " படம் பார்க்க வந்த ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது தியேட்டருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை" என்பார்
போலீஸ் அதிகாரிகளும் பாம் ஸ்குவாட் அதிகாரிகளும் இணைந்து மிகவும் பதட்டமான அந்த சூழலை கவனமாக அதனை கையாள்வார்கள். ஒருபக்கம் தியேட்டருக்கு வெளியே பதறிக் கொண்டிருக்கும் மக்களை சமாதானப்படுத்துவது, இன்னொருபக்கம் தியேட்டருக்குள் படம் பார்க்கும் மக்களை ஒவ்வொருவராக வெளியேற்றுவது என்பதை மிகச்சரியாக கையாள்வார்கள். ஏனென்றால் படம் பார்ப்பவர்களுக்கு உண்மை தெரிந்து பதட்டத்தில் வெளியே வந்தால் கூட்ட நெருக்கடியில் பல உயிர்கள் போகலாம், அதில் பாம் Trigger ஆகி வெடித்துவிடலாம். அதனால் மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கமே முற்றிலும் சிதறிப் போய் விடலாம்.

படம் பார்க்கும் மக்களை பதட்டப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதற்கு பல தந்திரங்களை கையாள்வார்கள். நடுவில் இன்டர்வெல் வந்துவிட்டால் மக்கள் எழுந்து வெளியே செல்லக் கூடும் என்பதால் இன்டர்வெல் கூட விடாமல் தொடர்ந்து படத்தை ஓட்டுவார்கள். தம் அடிக்க வெளியில் வரும் கூட்டம், தண்ணி குடிக்க வெளியில் வரும் கூட்டம், குழந்தைக்கு பால் கொடுக்க வெளியில் வரும் பெண், சிறு சச்சரவு செய்து வெளியில் வரும் கூட்டம் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்துவார்கள்.. போதாதென்று பாம் ஸ்குவாட் பெண்ணை உள்ளே அனுப்பி அங்குள்ள சில இளைஞர்களை கவர்ந்து வெளியே வரச் செய்து என்று அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி பாதிக்கும் மேலான கூட்டத்தை வெளியே வரச் செய்து விடுவார்கள்.
மறுபக்கம் எங்கெல்லாம் பாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதோ அதை தேடித் தேடி அகற்றுவார்கள். அப்படியும் ஒரு தீவிரவாதி பாம் ஸ்குவாட் வேஷம் போட்டுக்கொண்டு உள்ளே சென்று ஒரு பாம் வைத்து விடுவான். திரும்பவும் ஒரு பக்கம் பாம் தேடல், மறு பக்கம் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுதல் என்று முற்றிலுமாக படம் பார்த்தவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி விடுவார்கள். இறுதியில் படம் ஒரு நெகிழ்ச்சியான முடிவுடன் முடியும்.
இதுதான் ஒரு நிர்வாகத்தின் மிக சிறப்பான ரிஸ்க் மேனேஜ்மென்ட் நடவடிக்கைகள். கொரோனா வைரஸ் விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு மோசமாக சொதப்ப முடியுமோ அவ்வளவு மோசமாக சொதப்பி வருகிறார்கள்.
முதன்முதலில் பாதிக்கப்பட்ட கேரளாவும், அதன்பின் பாதிக்கப்பட்ட கர்நாடகாவும் Contact Tracing சிறப்பாக செய்து பரவலை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அதை மீறி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா திரும்பும் போது அவர்கள் சென்ற இடங்கள் அனைத்திலும் பரவும்போது அரசு பதற்றம் அடைந்து விட்டது. மறுபக்கம் இத்தாலி ஈரான் போன்ற நாடுகளின் பரவும் வேகம் கண்டு அச்சமடைந்து, போதாக்குறைக்கு பங்குச் சந்தை படுவேகமாக விழுக ஆரம்பித்தவுடன் வேகமாக நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் அடுத்தடுத்து திட்டமிடாமல் பல தவறுகளை இந்த மத்திய அரசு செய்து வருகின்றது.
மக்கள் ஊரடங்கு அறிவித்தது தவறில்லை. அதன் நோக்கம் என்ன என்பதை தெளிவாக கூறாமல் மக்களை உற்சாகப்படுத்திகிறேன் என்று கைதட்ட சொல்வதும், பாத்திரங்களை அடிக்க சொல்வதும் மக்களுக்கு இதன் தீவிரத்தை உணர்த்துவதற்கு பதில் தேசிய கொண்டாட்டமாக கடத்தப்பட்டது. இதை ஏதோ ஒருநாள் விரதம் போலவும் அந்த விரதம் முடிந்தவுடன் கூட்டம் கூட்டமாக கொண்டாட வேண்டும் என்பது போலவும் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஒரு நாள் ஊரடங்கு என்பது முற்றிலும் தோல்வியை தழுவி இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களின் நகர்வுகளை படிப்படியாக குறைப்பதற்கு பதிலாக சட்டென்று ரயில்வே போக்குவரத்தை முடக்கி பத்து நாட்களுக்கும் மேலாக 144 தடை உத்தரவுகளை பிறப்பித்தது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நியாயமாக இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஒவ்வொரு துறையாக மக்களை வெளியேற்றி அல்லது தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்த வேண்டும். ரயில்வே போக்குவரத்தை அதிகப்படுத்தி மக்கள் நிறைய இடைவெளிகள் கொண்டு பயணிக்க என்னவெல்லாம் செய்திருக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.
உங்கள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வரும், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வரும் என்று அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், மக்கள் பணியாளர்கள் கொண்டு திட்டமிட்டு செய்திருக்கவேண்டும். அதற்கு நேர்மாறாக ஒரு நாள் இடைவெளிவிட்டு பத்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் போது அந்த ஒரு நாளில் பத்து நாட்களுக்கு தேவையான உணவுகளை வாங்க கடைகளுக்கு கூட்டம்கூட்டமாக நோய் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் அல்லது அக்கறை இல்லாமல் செல்லும்போது எந்த நோக்கத்திற்காக அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்ததோ அந்த நோக்கம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது
உலகம் நம் மக்களையும், அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு இருக்கிறது. நாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறார்கள். அதிலும் இவை எல்லாம் வீடியோ ஆதாரத்துடன் எதிர்கால சந்ததிகள் பார்க்கும்போது தாம் இந்தியர்கள் என்பதைச் சொல்ல வெட்கப்பட போகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக