வியாழன், 19 மார்ச், 2020

திமுகவுக்காக என்ன செய்கிறார் பிரசாந்த் கிஷோர்?

திமுகவுக்காக  என்ன செய்கிறார் பிரசாந்த் கிஷோர்?மின்னம்பலம் : திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், என்னென்ன செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் திமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தற்போது விவாதத்துக்குரிய கேள்வியாக இருக்கிறது.
தமிழகத்தில் திமுக எந்தெந்த பகுதிகளில் பலமாக இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது என்ற ஆய்வை முதலில் மேற்கொண்ட பிகே டீம், அதன் அடுத்த கட்டமாக பலவீனமான பகுதிகளில் ஏன் பலவீனம் ஏற்பட்டது, அதை சரிசெய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த வகையில் பிரசாந்த் கிஷோர் குழுவினரின் முதன்மை கவனம் கொங்கு மண்டலம் நோக்கித்தான் திரும்பியிருக்கிறது. கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பகுதியளவு கொங்கு மண்டலத்துக்குள் வருகிறது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கடந்த சட்டமன்றத்தில் அதிமுக 47 தொகுதிகளையும், திமுக கூட்டணி 13 தொகுதிகளையும் பெற்றன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக வெற்றிகள் பெற்று திமுக கூட்டணி நூறு இடங்களைத் தொட்ட நிலையில் கொங்கு பகுதிகளில் கோட்டை விட்டதால் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது திமுக.
இந்த நிலையில்தான் கவுண்டர்கள், அருந்ததியர்கள், நாயுடு சமூகத்தினர் கணிசமாக வாழும் கொங்கு மண்டலத்தில் திமுகவின் சரிவு என்ன அதை சரிக்கட்டுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய முழு ஆய்வில் ஈடுபட்டது பிகே டீம். கடந்த கால தேர்தல் முடிவுகள், திமுக பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம் ஆகியவை இந்த ஆய்வில் முக்கிய கருதுகோள்களாக இருக்கின்றன. மேலும், கவுண்டர்களிலேயே கொங்குவேளாளரைத் தவிர இருக்கும் பிற பிரிவினர், அருந்ததியர் மக்கள், இவர்களைத் தவிர கொங்கு பகுதியில் இருக்கும் செட்டியார் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் பலம் என அனைத்தையும் ஆராய்ந்து ரிப்போர்ட் தயாரித்து வருகிறது பிகே டீம்.
இதேநேரம் இதற்கு இணையாக இன்னொரு முக்கியமான பணியும் நடந்து வருகிறது. திமுகவில் எந்த சாதிப் பிரமுகர்களுக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது, எந்த சாதிப் பிரமுகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை நிர்வாகிகளிடமே விசாரித்தறிந்து இதுகுறித்தும் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியளவில் பிரதிநிதித்துவம் மறுக்கப்படும் சாதிகள், அளவுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கும் சாதிகள் பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி நெறியாளர்கள் ஒரு குழுவாக சென்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் சந்தித்து உரையாடல் நிகழ்வொன்றை ஒருங்கிணைத்திருக்கிறது ஐபேக் டீம். முற்றிலும் அதிகாரப் பூர்வமற்ற தனிப்பட்ட முறையிலான இந்த உரையாடலில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், மக்களின் மனநிலை, கட்சிகளின் பலம், தொலைக்காட்சிகளில் யார் பற்றிய செய்திகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார். அந்த வகையில் ரஜினி என்ட்ரி பற்றியும் பேச்சு வந்திருக்கிறது. அப்போது, ரஜினியால் திமுகவுக்கு பெரிய அளவில் பாதிப்பு வராது என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக