வியாழன், 19 மார்ச், 2020

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்!

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்!மின்னம்பலம் : 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியை செய்து வருகிறார்கள். தமிழகம் தூய்மையாக இருப்பதில் இவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் இவர்களுக்கு புதிய பெயரை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 19) நடைபெற்றது.
110 விதியின் கீழ் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “துப்புரவு பணியாளர்கள் பொது இடங்களில் தூய்மையை பேணிக்காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.

இவர்களது நலனைப் பேணுவதில் அக்கறை கொண்டு, இப்பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல், அவர்தம் குடும்பத்தினருக்கென குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்துதல், அவர்களது குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் கருதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் மற்றும் திறன் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது எனத் தெரிவித்த முதல்வர், “இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக