வெள்ளி, 13 மார்ச், 2020

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு!

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு!மின்னம்பலம் : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இந்தியாவிலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். ஒரு தாழ்த்தப்பட்டோர் கூட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார்.

இதற்கு பட்டியலின அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, “திராவிட இயக்கத்தின் சாதனையை சொல்லவே அவ்வாறு கூறினேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அடங்கிய வீடியோவையும் அவர் சமர்ப்பித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக