வெள்ளி, 13 மார்ச், 2020

காஷ்மீர் தலைவர் ஃபரூக் அப்துல்லா: 7 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்


BBC : தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்புச் சட்டம் விலகப்பட்டு ஏழு மாதங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டு ஐந்தாம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் காஷ்மீரின் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.
ஆகஸ்டு ஐந்தாம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின்படி ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
"இன்று என்னிடம் பேச வார்த்தையில்லை. நான் இன்று சுதந்திரம் பெற்றேன். எனவே நான் டெல்லிக்கு செல்வேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உங்களிடம் பேசுவேன்,"என விடுதலை செய்யப்பட்ட ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அனைத்து தலைவர்களும் விடுதலையாகும் வரை நான் அரசியல் தொடர்பாக எதையும் பேச மாட்டேன்,"
"எனது விடுதலைக்காக பேசிய மாநில மக்களுக்கும், அனைத்து தலைவர்களுக்கும், மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். எனது இந்த சுதந்திரம் அனைத்து தலைவர்களுக்கு விடுதலையான பிறகு முழுமையடையும். அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்," என்றும் அவர் பேசினார்.


காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீதும் இந்த சட்டம் பாய்ந்தது.
இந்த சட்டத்தின்படி பாதுகாப்பு கருதி எந்த ஒரு நபரையும் தடுப்புக் காவலில் எடுக்கலாம்.
மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு அச்சம் ஏற்பட்டால், ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
இந்த சட்டத்தின்படி எந்த ஒரு விசாரணையுமின்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை தடுப்பு காவலில் வைத்திருக்கலாம்.
வட்டார ஆணையர் அல்லது மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் ஆணையின்படி இந்த சட்டத்தின்படி ஒருவரை தடுப்பு காவலில் எடுக்க உத்தரவிடலாம். போலீஸாரால் இதற்கான ஆணையை வழங்க முடியாது.
தடுப்பு காவலில் எடுக்கப்பட்டவர்களும், இதற்கான ஆலோசனை போர்டை தொடர்பு கொள்ளலாம் அல்லது எட்டு வாரங்களுக்குள் அறிக்கை வழங்கலாம்.
இந்த சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட நபர் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக