திங்கள், 9 மார்ச், 2020

அதிமுகவையும் திமுகவையும் மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் தானாக வளம் பெறுமாம் : தமிழருவி மணியன் ஆலோசனை

tamilaruvi-manian-slams-aiadmk-dmk
.hindutamil.in : அதிமுகவையும் திமுகவையும் மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் தானாக வளம் பெறும் என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று (மார்ச் 8) மாலை காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி  மணியன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"காந்திய காலத்தில் ஒருவன் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் அவன் தன்னிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் உன்னத நிலை. அந்த நிலை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினியின் பின்னால் தமிழகம் வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். காந்தி காலத்திற்குப் பிறகு, கொஞ்சம் பணத்தைப் போட்டு நிறைய எடுக்கும் இடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இப்போது, நம்மிடம் இருக்கும் எதையும் கொடுக்காமல், சுற்றியிருக்கும் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் பேராசை பிடித்தவர்கள் அரசியலில் உள்ளனர்.
ரஜினிகாந்த் தன் மார்க்கெட்டை இழந்து விடவில்லை. இன்றைக்கும் ரஜினிக்கு ஒரு படத்திற்கு ரூ.300 கோடிக்கும் மேல் வியாபாரம் இருக்கிறது. 70 வயதிலும் அவர் நடிக்க வேண்டும் என, படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போயஸ்கார்டனில் அணிவகுத்து நிற்கின்றனர்.
கோடி கோடியாக அவருக்குக் கொட்டிக் கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர். ஆனால், கோடிகளைப் புறக்கணித்துவிட்டு அரசியலை தூய்மைப்படுத்துவதற்காக ரஜினி வந்திருக்கிறார்.
அதிமுகவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒவ்வொருவரும் விசித்திரப் பேர்வழிகள்.
திமுக ஆட்சிக்கு வரத் துடிப்பது எதற்கு? 5 முறை ஆட்சியில் இருக்கும்போது செய்யாததையா திமுக இப்போது செய்துவிடப் போகிறது? கருணாநிதியால் நிகழ்த்த முடியாத சாதனைகளையா ஸ்டாலின் நிகழ்த்திவிடப் போகிறார்? ஆட்சிக்கு வந்து அனைத்துத் துறைகளிலும் பணம் அள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. ஏற்கெனவே அள்ளியவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. நம்மை விட குறைவாகச் சேர்த்து வைத்தவன் மலைபோல் குவித்து விட்டானே? எப்படி குவிப்பது என நாமல்லவா உலகத்திற்கு சொல்லிக் கொடுத்தோம் என திமுக எண்ணுகிறது.
அதிமுகவையும் திமுகவையும் மூட்டை கட்டிவிட்டு ஒன்றை வங்கக்கடலிலும், மற்றொன்றை அரபிக்கடலிலும் வைத்துவிட்டால் தமிழ்நாடு தானாக வளம் பெறும்.
ரஜினிகாந்த் பற்றற்ற ஒரு துறவியாக தன்னை பாவிக்கக்கூடிய மனிதர். அவரின் தொண்டர்கள் அதனை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.
ராஜகண்ணப்பன் மாறி மாறி திமுக, அதிமுகவில் இருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்தமாக தமிழினமே செத்தாலும் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம். இப்படிப்பட்ட மகத்தான தியாகிகளின் கூடாரமாக, வேள்விக்கூடமாக திமுகவும் அதிமுகவும் உள்ளன. அதனால்தான் அவற்றை நீங்கள் கைவிடுவதே இல்லை.
கொஞ்சமாவது தமிழக மக்களுக்குக் கோபம் வர வேண்டாமா? வாடகை சைக்கிளை கூட நம்பித் தர முடியாதவர்கள், இன்று அதானிகளாக அம்பானிகளாக இருக்கின்றனர்".
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக