செவ்வாய், 10 மார்ச், 2020

பேராசிரியரின் மறைவு உண்மையில் கல்வியின் அவசியத்தை உணர்ந்த ஒரு தலைவரின் இழப்பு

Karthikeyan Fastura : திமுக தலைவர் ஸ்டாலினின் பேராசிரியர் மைக்கு எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை, இரங்கல் கடிதத்திற்கே உரிய மொழி அலங்காரம் இல்லை ரெம்பவும் யதார்த்தமாக நிஜமான அன்பை, அதன் இழப்பை காட்டுவதாக இருந்தது. ஒரு இயக்கத்தினை கட்டமைத்த மூத்த தலைவர்களுக்கு இளம் தலைவர்கள் இப்படியான மரியாதையை, பேரன்பை காட்டுவது அந்த இயக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது சரியான தலைவர்களின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
க.அன்பழகனுக்கு எழுதிய அஞ்சலி மடல் படித்தேன். உண்மையிலேயே மனதை தொட்ட மடல். அவரை பேராசிரியர், கழக பொதுச் செயலாளர் என்று மட்டும் விளித்திருந்தால் ஒரு தலைவருக்கு எழுதிய வழக்கமான அஞ்சலி மாடலாக இருந்திருக்கும். பெரியப்பா பெரியப்பா வரிக்கு வரி எழுதிய அந்த அன்பில் தான் ஸ்டாலின் அவர்களின் கனிந்த மனம் தெரிந்தது. அந்த கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன்.பேராசிரியர் இறந்த அன்று இரவு ஒரு மணிக்கு ஸ்டாலின் அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதம் அது.
அதில் கடமைக்கு எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை, இரங்கல் கடிதத்திற்கே உரிய மொழி அலங்காரம் இல்லை ரெம்பவும் யதார்த்தமாக நிஜமான அன்பை, அதன் இழப்பை காட்டுவதாக இருந்தது. ஒரு இயக்கத்தினை கட்டமைத்த மூத்த தலைவர்களுக்கு இளம் தலைவர்கள் இப்படியான மரியாதையை, பேரன்பை காட்டுவது அந்த இயக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது சரியான தலைவர்களின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
ஏன் இது அவ்வளவு முக்கியமா என்றால் மிக முக்கியம் என்பேன். வரலாற்றில் பல இடங்களில் அதிகாரம் அடுத்த தலைமுறைக்கு நகரும்போது உறவுகள் பாராது, நட்புகள் பாராது, துரோகம் இழைக்கப்பட்டு ரத்தகளரியாக அரங்கேறுவது தான் இயல்பு. மூத்தவர்களின் நல்லாசியில் ஏறிய தலைவர்களே பெரும்பாலும் மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். தலைவர் ஸ்டாலினிடம் கட்சியின் தலைமை பொறுப்பு சரியான முறையில் சென்று சேர்ந்திருக்கிறது. அவரும் அதற்கு பொருத்தமானவராக மிக பொறுமையுடன் இருந்து அதனை பெற்றார்.
நிற்க. பேராசிரியர் க.அன்பழகன் போன்ற பெருந்தகையை கல்வி அமைச்சராக பெற்ற மாணவப் பருவம் என்னுடையது. அரசு பள்ளி மாணவனாக அந்த சமயத்தில் தான் பல்வேறு கல்வி நலத்திட்டங்கள் கிராமங்களை அடைந்ததை கண்ணார கண்டேன். அப்போது மாணவர்களுக்கு அவர் எழுதிய கட்டுரை தமிழில் ஒரு பாடமாக அமைந்திருந்தது. முற்றிலும் தமிழின் பெருமையை போற்றுவதாக அமைந்த பாடம் அது. அத்தனை கருத்து செறிவும், சொல் வளமும் கொண்ட கட்டுரையை பார்த்து அன்று வியந்திருக்கிறேன். அதே போல அறிவொளி திட்டம் அந்த சமயத்தில் தான் பரவலாக முன்னெடுக்கப்பட்டு "கற்போம் கற்பிப்போம், கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்" என்ற முழக்கத்துடன் வீதியெங்கும் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது மட்டுமல்லாமல் எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களையே மாலையில் ஆசிரியர்களாகவும் ஆக்கி கல்வி அறிவு பெறாத அனைத்து பொதுமக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்த்தார்கள். நான் அதில் பங்கு பெற்றிருக்கிறேன். இன்று இருக்கும் கல்வி அமைச்சர் கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வியையே பல வழிகளில் முடக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள். அன்று அவர் ஒட்டு மொத்த மாநில மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க முற்பட்டு செயல்பட்டார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்
பேராசிரியரின் மறைவு உண்மையில் கல்வியின் அவசியத்தை உணர்ந்த ஒரு தலைவரின் இழப்பாக பார்க்கிறேன்
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக கட்சி தொண்டர்கள், பேராசிரியர் குடும்பத்தினர் அனைவருக்கும் பொதுமக்களில் ஒருவனாக எனது ஆறுதலை இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக