ஞாயிறு, 22 மார்ச், 2020

சத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சகோதரனை பைலட்டாக்கி . ... வீடியோ

  மின்னம்பலம்:   நிர்பயா குடும்பத்துக்கு ராகுல் காந்தி உதவி செய்தது தொடர்பாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த துணை மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அதன் ஓட்டுநர் உட்பட 6 பேர் அவரது நண்பரை தாக்கி, நிர்பயாவை கொடூரமாக வன்புணர்வு செய்தனர். பிறகு ஓடும் பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்ட அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த கொடுமை நடந்தது.
இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் கழித்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதனை வரவேற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தன் மகள் வன்புனர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட பின் நடைபிணமாக இருந்த தங்களுக்கு, உணர்வுப்பூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்தவர் ராகுல் காந்தி என, நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் மெய்சிலிர்க்க தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

அதேசமயம், இந்த உதவியை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல்காந்தி கண்டிப்பாக கூறியதையும் பத்ரிநாத் சிங் குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்
தொடர்ந்து, “நிர்பயாவின் இழப்பால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ததோடு, அவரை பைலட் ஆக்கியதும் ராகுல்காந்தி தான் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் எவ்வாறாக இருந்தாலும், திரு. ராகுல் காந்தி எங்களுக்கு ஆண் தேவதை என வர்ணித்துள்ள பத்ரிநாத் சிங், இவ்வளவு உதவிகளையும் செய்துவிட்டு, அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட தகவலை, தமது பேட்டியின் போது முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ள அழகிரி,
“நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிற வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிர்பயா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோதனையில், மனிதாபிமான உணர்வோடு ராகுல்காந்தி அவர்கள் விளம்பரம் இல்லாமல் செய்த உதவியை 7 ஆண்டுகள் கழித்து நிர்பயாவின் பெற்றோர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக அரசியல்வாதிகள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் பலமடங்கு கூடுதலான விளம்பரத்தை தேடி ஆதாயம் தேடுவது இயல்பு. ஆனால், திரு. ராகுல்காந்தி அவர்கள் எவ்வித விளம்பரமும் இன்றி, பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினருக்கு செய்த உதவியை இன்றைக்கு நாடே போற்றுகிறது” என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக