வெள்ளி, 20 மார்ச், 2020

எலீட் பார்ட்டிகளில் கலந்து கொண்ட அரசியல் சினிமா பிரபலங்கள் கொரோனா அச்சத்தில்


ஒரே ஒரு பார்ட்டி: கொரோனா அச்சத்தில் அரசியல் பிரபலங்கள்!மின்னம்பலம் : லண்டன் சென்றுவிட்டு இந்தியா திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது லக்னோவில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனிலிருந்து அவர் லக்னோ விமான நிலையம் வந்து இறங்கியதும், அவருக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டதில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவில்லை. அதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் சளி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 20) தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லோருக்கும் வணக்கம். கடந்த 4 நாட்களாக எனக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன, பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது நானும் எனது குடும்பமும் முழுமையான தனிமைப்படுத்தலில் இருக்கிறோம். லண்டனிலிருந்து வந்ததிலிருந்து நான் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆராயும் பணிகள் தொடங்கியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு நான் வந்தபோது விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்ததில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன் பிறகுதான் தெரியவந்தது. தற்போது லேசான காய்ச்சலுடன் நலமாக இருக்கிறேன். உங்களுக்கும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தான் லண்டன் சென்று வந்த பயண விவரங்களை அதிகாரிகளிடம் இருந்து கனிகா கபூர் மறைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா இருப்பது தெரியவருவதற்கு முன்னதாக, லக்னோவில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அகமது அக்பர் என்பவர் கொடுத்த பெரிய பார்ட்டியில் கனிகா கபூர் கலந்துகொண்டுள்ளார். இதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் பாராளுமன்ற பாஜக எம்.பியுமான துஷ்யந்த் சிங் உட்படப் பல முக்கிய அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். பெரிய தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், என பல தரப்பினரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கனிகா கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரும், அவரது மகனும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்கும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவர்களோடு மட்டும் இந்த சந்திப்பு முடிவடையவில்லை. கனிகா கபூருடனான சந்திப்பைத் தொடர்ந்து துஷ்யந்த் நாடாளுமன்றத்துக்கும் சென்று வருகிறார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அரசு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. பிரதமர் சுய தனிமை வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் துஷ்யந்த் அருகில் நான் 2.5 மணி நேரம் அமர்ந்திருந்தேன். தற்போது நான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இத்தோடு மட்டுமல்லாமல் மார்ச் 18ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எம்.பி.களுக்கு, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் கொடுத்த விருந்திலும் துஷ்யந்த் கலந்து கொண்டிருக்கிறார். இதிலும் பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பலரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இன்று காலை வரை 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நிலவரப்படி 223 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக