வெள்ளி, 13 மார்ச், 2020

ரஜினி .... தன்னுடைய வெற்றிக்கும்,வளர்ச்சிக்கும் மட்டுமே சமூகத்தை பயன் படுத்திய ஒரு நடிகன்

சாவித்திரி கண்ணன் : எல்லோருக்குமே ’பெப்பே’ காட்டிட்டார்! – என்னை
மாதிரியான ஒரு சில ஆட்களைத் தவிர்த்து! அரசியலுக்கு அவர் ஒரு போதும் வரப் போவதில்லை என்பதை இருதாண்டுகளுக்கும் மேலாக இடையறாது சொல்லிவந்தேன்!
எனவே,அவர் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தால் தான் அது எனக்கு நம்ப முடியாத வியப்பாக இருந்திருக்கும்!
அவரது அறியாமை இன்றாவது வெளிச்சத்திற்கு வந்தது குறித்து ஒரளவுக்கு நிம்மதியடைகிறேன்!
’’அவர் அரசியலுக்கான மன நிலை கொண்டவரல்ல….’’ என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த சமூகத்திற்கு மிக நீண்ட காலகட்டம் தேவைப்பட்டதற்கு மீடியாக்களின் வர்த்தக சூதாட்டமும் ஒரு முக்கிய காரணம்!
’ரஜினியின் அரசியல் வருகை’ என்ற ஒற்றைச் சொல்லாடலில் கால் நூற்றாண்டுகாலம் தமிழகத்தை ஒரு மீளமுடியாத மாயையில் ஆழ்த்தி, நன்றாக காசு பார்த்துவிட்டனர்!
ரஜினியுமே கூட,மீடியாக்கள் தொடர்ந்து தன்னைப்பற்றிய மாயைகளை கட்டமைத்து பேசுவதில்,எழுதுவதில் ஒரு அற்பமான ரகசிய சந்தோசத்தை மனதிற்குள் அனுபவித்து வந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்! அது அவரது பட வெற்றிகளுக்கும்,ரசிகர்களை தக்க வைப்பதற்கும் கூட ஒரு துருப்புச் சீட்டாகவும் இருந்தது என்பது உண்மை தானே!

ரஜினி நினைத்திருந்தால் இன்று சொல்லமுடிந்ததை 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிக்க முடியுமே!
ரஜினியின் அரசியல் அறியாமை இன்று எந்தெந்த விதத்தில் எல்லாம் வெளிப்பட்டது என பார்க்கலாம்!
அரசியலில் கட்சி பொறுப்புகள் என்பவை தேர்தல் நேரத்திற்கு மட்டுமானதாக இருந்தால் போதுமானது என்றால்,தேர்தலுக்குப் பிறகு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு,தேவைகளுக்கு எப்படி கட்சிக்காரர்கள் தலையிட முடியும்?
ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் லோக்கலில் மக்கள் மத்தியில் அடையாளம் பெறுவதற்கு கட்சியைவிட்டால் வேறு பிடிமானமே இல்லை! ’நீ, கட்சியால் அடையாளம் பெறுவதற்கே எனக்குச் சம்மதம் இல்லை’ என்றால், எந்த தொண்டனும் அந்த தலைவனை ஏற்கமாட்டான்!
’வழங்கப்படும் கட்சிப் பதவிகள் காசுபார்க்கத் தான் வழிவகுக்கும்’ என்ற அச்சத்தில் நியாயம் இல்லாமலில்லை! ஆனால்,அதற்காக நிர்வாகிகளே வேண்டாம் என்றால், கட்சி நடத்தவே முடியாது! கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை அடிமட்டம் வரை அவர்களால் மட்டுமே கொண்டு செல்லமுடியும்! ஆக்சிடெண்ட் நடக்கும் என்பதற்காக நாம் பயணிக்காமலே இருக்க முடியாது!
சிஸ்டம் சரியில்லையாம்! சிஸ்டம் எப்படி இருக்கு என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தான் இதை அடிக்கடி சொல்கிறார்! நீச்சல் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் கரையில் நின்று கொண்டு சொன்னாலும், தண்ணியில் இறங்காமல் அனுபவம் பெறாமல் பேசுவதில் யாதொரு பயனும் இல்லை!
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
’’ஆடத் தெரியாதவள் மேடை கோணல்’’ என்று குற்றச்சாட்டு வைப்பது போல, ’கூரை ஏறி கோழிபிடிக்க துப்பில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்’ என்று சொல்வது போல இருந்தது ரஜினியின் பேச்சு!
ரஜினி, தனக்கு என்ன முடியும்,முடியாது என்று தன்னைத் தானே கண்டுபிடிக்கவே இத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால், இவருக்கு முதலமைச்சருக்குரியவரை கண்டடைய எத்தனை ஆண்டுகாலம் பிடிக்குமோ...!
தன்னுடைய வெற்றிக்கும்,வளர்ச்சிக்கும் மட்டுமே சமூகத்தின் சகல தளத்தையும் சதாசர்வ காலமும் பயன்படுத்தியே பழக்கப்பட்ட ஒரு மனிதன், சமூகத்திற்கு தான் எப்படி பயன்படமுடியும் என்று இன்னும் நினைக்கவே ஆரம்பிக்கவில்லை! இனி நினைக்கவும் வழியில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக