திங்கள், 9 மார்ச், 2020

திமுக: அடுத்த பொதுச் செயலாளர், பொருளாளர் .. டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ.வேலு என பலத்த போட்டி

மின்னம்பலம் : திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மார்ச் 7ஆம் தேதி காலமானதை அடுத்து அக்கட்சி ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது. இந்த நிலையில் நிர்வாக ரீதியாகப் பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது பற்றி கட்சியில் விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
வெளிப்படையாக இந்த விவாதங்கள் நடக்கவில்லை என்றாலும், அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவின் அனைத்து மாசெக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகனை அடுத்து இப்போதைய சீனியர்களில் முதன்மையானவர் பொருளாளராக இருக்கும் துரைமுருகன்தான். எனவே அவரையே பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்பதே ஸ்டாலினின் மனத்தில் ஓடும் எண்ணம்.
அப்படியே பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டால் அவர் இப்போது வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில் பலத்த போட்டி இருக்கிறது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ.வேலு என பலத்த போட்டி நிலவுகிறது.

அண்மையில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட டி.ஆர்.பாலு, அப்போதே தன் சீனியாரிட்டி குறித்துக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார். அவரிடமிருந்து கே.என்.நேருவுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தபோது ஸ்டாலினிடம் வருத்தப்பட்டு, சில நாட்கள் அறிவாலயம் பக்கம்கூட வராமல் இருந்தார் டி.ஆர்.பாலு.
அவரது சீனியாரிட்டியையும், அண்மையில் அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் கருத்தில் கொண்டு பொருளாளராக டி.ஆர்.பாலுவைத் தேர்வு செய்யலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின் என்கிறார்கள் தலைமைக் கழகத்தில் நடப்பவற்றை அறிந்தவர்கள்.
ஏழு நாட்கள் துக்கம் முடிந்த பிறகே வெளிப்படையான இதுகுறித்த நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக