வியாழன், 5 மார்ச், 2020

BBC : கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர்


மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 55ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மலேசியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 11 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
இதனால் மலேசிய அரசும் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக அங்கு கிருமித் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
ஒரு நபரிடம் இருந்து பலருக்கு பரவிய கிருமித் தொற்று
கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேருக்கும், புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் பெரிய அதிகாரிக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது என்றும், அவர் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற பலருக்கு கிருமித் தொற்று பரவியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசிய 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

அந்த அதிகாரியும், அவர் மூலமாக கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பலருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியும் துவங்கியுள்ளது. இதுவரை 215 பேர் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 16 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. 19 பேருக்கு கிருமித்தொற்று இல்லை. மேலும் 180 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திடீரென கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மலேசிய மக்களை சற்றே பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இத்தாலி, ஜப்பான், இரான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இம்மூன்று நாடுகளிலும் உள்ள ஏழு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது. இப்பகுதிகளில் இருந்து மலேசியா வருபவர்களுக்கு அதன் எல்லைகள் மூடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
"இந்தப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, 14 நாட்களைக் கடக்காத நிலையில், மலேசியா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். எனவே தற்காலிகமாக இப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், முன்பே திட்டமிட்ட பயணங்களை ஒத்திப்போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது," என டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு: சிங்கப்பூர் நிலவரம்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள தென்கொரியா, இத்தாலி, இரானில் இருந்து சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு நல்ல பலன் கிடைத்து வரும் நிலையில், தென்கொரியா, வடக்கு இத்தாலி, இரான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அந்நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல் சிங்கப்பூரில் இருந்தும் அந்நாடுகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.
முன்பே இந்நாடுகளுக்குச் சென்றுள்ள சிங்கப்பூர் குடிமக்களும், அங்கு நிரந்தரமாக வசிக்கும் அனுமதியைப் பெற்றவர்களும் மீண்டும் நாடு திரும்புவதில் பிரச்சனை இல்லை.
எனினும் கிருமித் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்பப்படும் அந்நபர்கள், அடுத்த 14 நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்லாமல் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது வியாழக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை

சிங்கப்பூர் வருபவர்களுக்கு சுவாசப் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பரிசோதனை முடிவுகள் அதிகபட்சமாக ஆறு மணி நேரத்துக்குள் தெரிய வரும் என்றும், சம்பந்தப்பட்ட பயணிகளிடம் விவரம் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுகுறுகியகால விசாவில் வருவோர் சோதனைக்கு உட்பட மறுத்தால் அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக தமிழ்முரசு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
"அதேபோல, சோதனைக்கு உட்பட மறுக்கும் நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரின் அனுமதியும் சிறப்புரிமைகளும் ரத்து செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சிங்கப்பூர் குடிமக்கள் உட்பட, சோதனைக்கு உட்பட மறுக்கும் பயணிகள் தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் தண்டனையை எதிர்நோக்குவர்," என்று அந்நாளேடு வெளியிட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கிருமித்தொற்று அதிகரித்தால் அதை எதிர்கொள்ள நாம் மனத்தளவில் ஆயத்தமாக இருக்கவேண்டும்," என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றுடன் நியூசிலாந்து பறந்த பயணி

இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகருக்குச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதை ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. அக்குறிப்பிட்ட பயணி கடந்த 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து நியூசிலாந்துக்கு பறந்துள்ளார். பின்னர் மார்ச் 2ஆம் தேதி அன்று

இந்நிலையில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பயணம் செய்த விமானங்களில் சக பயணிகளின் விவரங்களைச் சேகரித்து வருவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தங்கள் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும் தலையணை உறை, போர்வை, ஒலிப்பெருக்கி கருவி அனைத்தும் உடனுக்குடன் மாற்றுவதாகவும், ஒட்டுமொத்த விமானமும் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதாகவும் ஏர் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

அரசு கட்டடங்களில் நிறுவப்பட்ட புதிய வெப்பநிலை கணக்கிடும் கருவி கொரோனா கிருமித் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு ஒருவரது உடல் வெப்பநிலையைக் கணக்கிடுவது முக்கிய பரிசோதனையாக உள்ளது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெப்பநிலையைக் கண்டறிவதற்கான கருவிகள் (வெப்பமானி) பொருத்தப்பட்டுள்ளன.

 இத்தகைய கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் குறைந்த விலையில் வழங்குவதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் அண்மையில் ஒருவரின் உடல் வெப்பநிலையை எளிய, சிக்கனமான முறையில் சோதிக்க தானியங்கி தொழில்நுட்பத் திட்டம் ஒன்று சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 'ஜியோவி டெக்' என்ற இந்த வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி, ஒருவர் மீது படாமலேயே அவரது வெப்பநிலையை உணர்ந்து அறிவிக்கும். இந்தப் புதிய கருவியை சிங்கப்பூர் அரசு நிறுவனங்கள் இயங்கும் கட்டடங்களில் நிறுவியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக