வியாழன், 5 மார்ச், 2020

டெல்லி பள்ளிகளுக்கு 27 நாட்கள் விடுமுறை.. கொரோனா முன் எச்சரிக்கை ..

மின்னம்பலம் : கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா: டெல்லி பள்ளிகளுக்கு  27 நாட்கள் விடுமுறை!உலகநாடுகள் அனைத்தையும் பெருமளவில் பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த கொடூர வைரஸின் தாக்கத்தால் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டு அவர்கள் குணமடைந்து விட்டனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரைப் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், டெல்லியில் அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக