திங்கள், 9 மார்ச், 2020

பிட் காயின் பகுதி -2.. நீங்களும் வாங்கலாம் கிரிப்டோ கரன்சி. ..வாங்கலாமா? வேண்டாமா ?

Muralidharan Pb : பிட் காயின் பகுதி -2
2009ல் இதை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்திய போது இதன் விலையாக நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தெரியுமா ?
ரூபாய் மதிப்பின் படி வெறும் ரூபாய் 1.90 மட்டுமே. அதன் உச்சகட்ட விலை 2017ல் அது ஒரு காயின் விலை 15 லட்சங்கள் வரை சென்றது.
கேட்கவே பிரமிப்பாக இருக்கா ?
இதன் வளர்ச்சி என்ன ? அன்று நான் ஒரு 2 ரூபாய் கொடுத்து 100 பிட் காயின் வைத்திருந்தால் 2017ல் இதன் உச்சம் தொட்ட போது 15 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கும்.
உலகில் எங்காவது எந்த தொழிலிலாவது 200 ரூபாய் முதலீடு போட்ட 8 ஆண்டுகளில் 15 கோடி வரை உயர்ந்தது உண்டா ? இது புதுமை இல்லையா ? புரட்சி இல்லையா ?
ஆனால் நம் போன்ற இந்தியர்களுக்கு இது தெரிய வரும் போதே, பாதிக்கும் மேல் காயின்கள் வெளியாகி,வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கிவிட்டனர். பெருமளவில் உலகம் முழுவதும் 2016ல் இது தெரிய வர, 2017ல் இன்னும் நிறைய பேர் இதை அறிந்திருந்தார்கள். ஆனால் கூடவே தவறான தகவல்களோடு.
2018 ஆரம்பத்தில் இதன் விலை வீழ்ச்சி அடைந்து, படிப்படியாக குறைந்து, ரூபாய் 3 லட்சங்கள் வரை போனது. இன்று இதன் இன்றைய விலை 6.71 லட்ச ரூபாய். சில மாதங்களாகவே இதன் விலை மெதுவாக ஏற்றம் காண்கிறது.
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பிட் காயின் விலை ஏற்றம் இதுவரை அதை எதிர்பார்க்கப்பட்ட 5% கூட இன்னும் எட்டவில்லை. எனவே இது இன்னும் சில ஆண்டுகளில் பல கோடி வரை கூட போகலாம் என்கிறார்கள். யூகம் தான். இன்னைக்கு தேதியில் இவர் தான் முடிசூடா மன்னன்.
உலகத்தில் பிட் காயின் மட்டும் மெய் நிகர் நாணயம் (Virtual Currency) என்று கேட்டால் அது தான் இல்லை. இதைப் போல சுமார் 3000 காயின்கள் வந்து போய் கொண்டிருக்கின்றது.

பிறகு ஏன் பிட் காயின் மட்டும் என்ன சிறப்பு ?
ஒரு புதிய பகுதியில் முதன்முதலில் குடியேறிய ஒரு குடும்பம் தானே அந்த இடத்தில் பெரிய புள்ளியாக இருக்கும்? அந்த பெரிய புள்ளி தான் பிட் காயின்.
இந்தியாவில் இதற்கு எக்ஸ்சேன்ஜுகள் இருக்கின்றன.
இதை ஏன் இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்தது ?
ஊகத்தின் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்திற்கு, நிலையற்ற சந்தையாக இது காணப்படுகிறது, இதற்கு முன்பு தீவிரவாதிகளிடம் இது பணப்பரிமாற்றத்திற்கு பயன்பட்டது, இது அரசின் நிதி நிலையில் ஏதாவது பக்கவிளைவுகளை கொண்டுவரும், என காரணங்காட்டி தடை செய்தது.
3 நீதி அரசர்கள் அமர்வு இதை விசாரித்து, ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் மெய்நிகர் நாணயம் இதுவரை எந்த ஒரு பாதகமும் உருவாக்கவில்லை, மேலும் எந்த நாட்டிலும் இதுவரை இந்த வகை நாணயங்களை தடை செய்யவில்லை. மத்திய வங்கியின் இந்த தடை, இந்த மெய்நிகர் செயல்பாட்டு நிறுவனங்களை கோமாவில் தள்ளி விட்டுள்ளது, அதோடு மட்டுமில்லாமல் இதையே நம்பி இருக்கும் பலதரப்பட்ட வங்கி செயல்பாடுகளை நசுக்கும். ஆர்பிஐ மேற்கொண்டு தடை கோர, இந்த மெய்நிகர் நாணயங்களால் நமது பொருளாதாரத்திற்கும், ரொக்க பண பரிமாற்றத்திற்கும் குந்தகம் வருமேயானால் தடை செய்வது நிச்சயம். ஆனால் நமது வங்கி வணிகத்திற்கு இது வராத பட்சத்தில் இதை தடை செய்யவது அவசியமற்றது என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் ஆர்பிஐ இதை விடாமல் துரத்தும்.
அதோடு மட்டுமல்லாமல்,வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாவது நேர்மையோடு நடத்தும் இந்த மாதிரி வியாபாரங்களை நம்ம ஆட்கள் அடித்து குறுக்கு வழியில் காணாமல் போனதும் நடந்துள்ளது. இந்நாட்டில். வட இந்திய முக்கிய புள்ளிக்கு வேண்டப்பட்ட நபர் ஒருவர் இதை வாங்குவதாக முதலீடு பெற்று சுமார் 1500 கோடி ரூபாய் வசூலித்து, இதுவரை ஒரு ரூபாய் கூட திருமபி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கமால் ஏமாற்றியதும் நடந்தது. அந்த ஏமாற்று பேர்வழி தலைமறைவாகி விட்ட வேளையில் இதை அப்போதைக்கு ஆறப் போட்டது இந்திய அரசு.
நிறைய பேர் பிட் காயின் மோசடியில் ஈடு பட்டிருக்கும் வேளையில் இதன் விலை வீழ்ச்சி ஆரம்பமானது. மிக முக்கியமாக சீன நாடு இதை முதலில் தடை செய்தது. காரணம் உலகில் அதிகமாக பிட் காயின் வைத்திருப்போர்கள் சீனர்கள், 3 பேரில் 1 சீனன் வைத்துள்ளான். சீனா அரசே ஒரு பிட் காயின் கொண்டு வரப்போகிறேன் என்று அறிவித்திருந்தது சீன அரசு. அதுவும் தோல்வி.
பிறகு கொஞ்சம் தளர்த்தியது.
10 மெய்நிகர் காயின்கள் உலக அளவில் பெரிய சந்தையாகி கொண்டிருக்கிறது. அதில் பிரதானமானது பிட் காயின். எந்த நாட்டு நாணயமோ அதை பிட் கையினாக மாற்றி, பிறகு இதற்கென்று ஒரு சந்தையில் வாங்க விற்க முடியும் என்று ஒரு கூட்டமைப்பு (syndicate) ஒன்று உலக அரங்கில் உருவாக்கப்பட்டது. ஷேர், கமாடிட்டி, ஆயில், டாலர் வணிகம் போல் கிரிப்டோ கரன்சிக்கும் ஒரு இணைய சந்தை உருவானது.
சில நாடுகள் நேசக்கரம் நீட்ட, இது இன்னும் பெரிய வளர்ச்சி அடைந்து ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கியது இதனை இயக்கும் மற்ற முன்னணி நாணய நிறுவனங்கள்.
பிட் காயின் நல்லபடியாக வந்தால் டாலர் சில ஆண்டுகளில் பின்னுக்கு தள்ளப்படும். பிட் காயின் வைத்து எளிதாக எதையும் வாங்கலாம்.
இதை வைத்திருக்க என்ன தேவை ?
ஒரு நல்ல ஸ்மார்ட் மொபைல் இருந்தால் போதும், வங்கியில் பணம் வைத்திருந்தால் நீங்களும் கிரிப்டோ கரன்சி வாங்கி முதலீடு செய்ய முடியும்.
ஆனால் மற்ற கருப்பு சந்தை போல் அல்லாமல், பாண்கார்ட், ஆதார்,புகைப்படம், மற்றும் நிரந்தர மொபில் நம்பர், ஈமெயில் வைத்திருந்தால் நீங்களும் வாங்கலாம் கிரிப்டோ கரன்சி.
இதை வாங்கலாமா? வேண்டாமா ?
சாப்பாட்டில் இரண்டுவகை
முதல் வகை
ஹோட்டலுக்கு சென்று ஒரு தோசையோ, டம் பிரயாணியோ சாப்பிடுவதாக இருந்தால் போய் ஆர்டர் செய்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு வருவது எளிது. இது மற்ற வகை முதலீடுகள் போன்றது.
இரண்டாவது வகை:
ஒரு திருமணத்திற்கு நீங்க உணவு தயாரிக்கவேண்டுமானால கொஞ்சம் முன் யோசனையோடு ஒரு நல்ல சமையல்காரரை பார்த்து, பேசி, உங்களுக்கு தேவையானதை கேட்டு, அவர் ஒரு பெரிய பட்டியலை கொடுக்க, இறுதியில் காசு கொடுத்துவிட்டு, காத்திருந்தால் நிச்சயம் அற்புதமான திருமண விருந்து கிடைக்கும். அதுபோல, சில காலம் நீங்கள் இதைப் பற்றி கவலைப் படாமல் காசை நீண்ட காலம் முதலீடு செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறது வணிக உலகம்.
யாருங்க காசை வச்சி ரிஸ்க் எடுக்கறது என்ற பயமா ? தயவு செய்து முதலீடு ஏதும் செய்யாதீர்கள். இந்த பதிவு உங்களுக்கானது இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக