ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- ஒரு Flashback கட்டுரை ..

maattru.blogspot.com :  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு விமர்சனம். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.
> பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
“வாழுங்கலை சர்வதேச மையம்” என்பது நடக்கிறது. “வேதவிஞ்ஞான மகாவித்யா பீடம்” இருக்கிறது. வேதப் பாடல்கள் எல்லாம் இவருக்கு விஞ்ஞானம்தான்! இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் இந்தியாவில் மட்டுமல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணையதளம் விவரித்துக் கொண்டே போகிறது.


ஈராக்கிற்குக்கூடப் போய் “ஆன்மிகச் சேவை” செய்திருக்கிறார் ரவிசங்கர். அந்த நாட்டின் மீதான அமெரிக்கத் தாக்குதல் பற்றி, சதாம் உசேன் படு கொலை செய்யப்பட்டது பற்றி இந்த “ஆன்மிக குரு”வின் கருத்து என்னவென்று அறிய முடிய வில்லை.

இணையதளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந் தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங் கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார்- “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

இப்போது நம்மை ஈர்க்கும் செய்தி இது - “இந்த ஆடம்பரமான கட்டடம் கட்டுவதற்கான பணம் பெரும் கம்பெனிகளால் தரப்பட்டது. அதிலும் பெரும்பாலான பணம் பக்கத்தில் உள்ள பெங்களூரு மென் பொருள் கம்பெனிகளால் தரப்பட்டது.” மதத்திற்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இடையிலான உறவு ஆதிகாலந்தொட்டு மிக வலுவானது. மதத்தின் கிளைப் பிரிவுகளாக அவ்வப்போது எழும் மடாதிபதிகள் அல்லது ஆன்மிகக் குருக்களுக்கும் இந்த ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவும் பாரம்பரியமானதே.

தகவல் தொடர்புத்துறைக் கம்பெனிகள் எனப் பட்டவை படு நவீனமானவை. ஆனால்அவற்றின் சமூகச் சிந்தனைகள் பத்தாம் பசலித்தனமாக இருக்க முடியும் என்பதற்கு இதுவோர் உதாரணம். ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப் பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது. அந்த நவீன கம்பெனிகளின் சுவைக்கு ஏற்ப நவீன கட்டடத்தையும் எழுப்பியிருக்கிறார்.

பக்தர்களை ரவிசங்கர் சந்திக்கும் மண்டபத்தை நூலசிரியர் சித்தரித்திருக்கிறார். அங்கே இஸ்லா மியப் பிறை, டேவிட்டின் நட்சத்திரம், இயேசுவின் சிலுவை இருந்தன. ஆனால் செல்வத்துக்கு அதிபதி யான லட்சுமி தேவியின் உருவம் பெரிதாக இருந்தது. இந்து மதமே பெரியது, அதிலும் பணத் துக்கான கடவுளே முக்கியம் என்பதாக இருந்தது. தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆன்மிகக் கூடமே!

வந்தவர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரவிசங்கர் அளித்த பதில்களும் இன்னும் வினோத மானவை. லூசே ஆச்சரியத்தோடு எழுதுகிறார்- “உயர் ஞானம் பற்றிய, புறவுலகு கடந்த விஷயம் பற்றிய கேள்விகளைக் கேட்பார்கள் என்று நான் எதிர் பார்த்தேன். ஆனால் அவையோ சண்டித்தனம் செய்யும் இளவயசுப் பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது, அலுவலகத்திலேயே வெகுநேரம் தங்கலாமா, திருமணத்திற்கு ஜோடியை எப்படித் தேர்ந்தெடுப்பது எனும் இகவுலகு சார்ந்தவை யாகவே இருந்தன.

நான் நல்ல பெண்தானா என்று எப்படி மெய் யாலும் அறிவது என்று ஒரு பெண்மணி கேட்டார். “எப்போதுமே நீங்கள் இனிமையானவராக, நல்லவராக இருக்க வேண்டியதில்லை” என்று பதில் சொன்னார் குருஜி. பக்தர்கள் உற்சாகமாகச் சிரித்தார்கள். திகைத்துப் போனவனாக சுற்று முற்றும் பார்த்தேன். நூற்றுக்கணக்கான ஒளிரும் கண்களும் பரபரப்பான முகங்களும் தெரிந்தன. மின்னஞ்சலில் வந்த ஒரு கேள்வியை சீடர் ஒருவர் வாசித்தார். அது இப்படி முடிந்தது- ‘நான் உங்களைப் பெரிதும் நேசிக்கிறேன்.’லஞ்சம் கொடுப்பது எப்போதுமே தவறுதானா? என்று கேட்டிருந்தார். ‘எப்போதுமே நீங்கள் பெரிய லட்சியவாதியாக இருக்கக் கூடாது. சின்னச் சின்ன சமரசங்களை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்’ என்றார் குருஜி. கூட்டத்தினர் மீண்டும் சிரித்தார்கள். வாழுங்கலையின் மூச்சுப் பயிற்சி உத்திகள் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன்”.

நவீன உயர் மத்தியதர வர்க்கத்திற்கு நீக்குப் போக்காக வாழ்ந்து உலகை அனுபவிப்பது பற்றிய ஆன்மிக போதனையாக அது இருந்தது. உலக மேன்மைக்கான, சக உயிர்களின் நிம்மதிக்கான ஆன்மிக விசாரணை அல்ல அது. குறுக்கு வழியில் போவதுகூடச் சரிதான் என்று உயர் அதிகாரிகளை மனத்தளவில் தட்டிக் கொடுக்கிற காரியம் அது.

இப்படிப்பட்ட கேள்வி-பதில் அமர்வு முடிந்ததும் இந்த நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது. அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந் தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் கேட்டார். அதற்கு அவரின் பதில் - “ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல மடத்தின் நிதி ஒழுங்கின்மை பற்றிக் கேள்விப்பட்டபோதும் அப்படியாகவே இருந்தது. ஆனால் வெகுமக்களி டமிருந்து எதிர்வினை இல்லாதது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள். ஆனால் அந்த நிறுவனம் மக்களைச் சென்றடைந் ததில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். சமுதாயத்தின் இதர பகுதியினருக்கு அந்த மடத்தின் மீது ஈடுபாடு இல்லை.”

ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளி வாக உணரலாம். இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

ஆனாலும் இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி இவர் கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும்கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல் கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

லூசே கேட்டார் - “அல்லாவுக்கும் சொந்தமாக இருக்குமா?” ரவிசங்கர் பதில் சொன்னார்- “ஆமாம், நீங்கள் பார்த்தீர்கள். நாங்கள் கடவுளின் அனைத்து மார்க்கங்களையும் ஒப்புக் கொண்டுள்ளோம். மற்றவர்களும் இப்படிச் செய்ய வேண்டும் என்று சில சமயம் நாங்கள் விரும்புகிறோம்” இவர்களது “சர்வசமய சமரசம்” என்பது கூட சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கிற கதையாக உள்ளது!

இதனால் இந்த நூலாசிரியர் எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். அது- “சில வாரங்களுக்குப் பிறகு எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் சின்தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு!

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பார்கள். புற்று என்றால் பாம்பு இருக்கும் என்று சந்தேகிக்கலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்குமா? இருக்கலாம். தோற்றத்திற்கும் உள்ளுறைக்கும் இடையே சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். லூசே எழுதுகிறார்- “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி-தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக