வியாழன், 20 பிப்ரவரி, 2020

CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்! ... இரண்டே பிரிவுகள்தான் .. Stand up before the nation falls

சுமதி விஜயகுமார் : Unity in diversity என்பதெல்லாம் இப்போது இல்லை.
இரண்டே இரண்டு பிரிவுகள் தான்.
CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்
ரத்தம் சிந்தி போராடும் மாணவர்களின் பக்கம் துணை நிற்பவர்கள் Vs மாணவர்களின் போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்து விட்டார்கள் என்று கூறுபவர்கள்
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையையே மாற்றி விட்டார்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் Vs இந்துக்களின் பாதுகாப்பிற்கு தாங்கள் தான் காவலர்கள் என்று கூறுபவர்கள்
இதுவரை அமைதியாய் இருந்தவர்கள் கூட இப்போது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து தான் ஆக வேண்டும். அது எந்த பக்கம் என்பது அவரவர் விருப்பம். ஆனால் அப்படி எடுக்கப்படும் முடிவு இது எப்போதும் போல் காந்தி நாடாகவே இருக்க போகிறதா இல்லை சில நாடுகளை போல அடிப்படைவாத நாடாக மாறி நாட்டையே மத குழிக்குள் தள்ள போகிறதா என்பதை முடிவு செய்யும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா அடைத்திருந்த வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதாக வந்ததில்லை. எத்தனை குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யம். அந்த ஊழல் கட்சி கட்டமைத்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் இப்போது இந்த தேசபக்கத்தி பற்றி நமக்கு வகுப்பெடுப்பவர்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன முதலில் இந்த துலுக்கர்களை நாடு கடத்த வேண்டும் அதுதானே அத்தியாவசியம்.

பொருளாதாரம் அபாயகரமான வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது என்று உலக பொருளாதார நிபுணர்கள் புள்ளி விவரங்களை அடுக்கி கொண்டிருக்க, அவர்கள் எல்லாம் நம் நாட்டில் இருந்து கொள்ளை அடித்து கொண்டு போனவர்கள், நம் நாட்டை பற்றி என்ன கவலை என்று கேட்கும் அறிவு ஜீவிகள். அந்த அறிவு ஜீவிகள் தங்கள் தேசப்பற்றை இந்தியாவில் இருந்து காட்டாமல் அதே கொள்ளைக்கார வெள்ளையர்கள் நாட்டில் கையை கட்டி வேலை பார்ப்பது தான் முரண்பாட்டின் உச்சக்கட்டம். நாட்டுப்பற்றேல்லாம் மோடி அரசை விமர்சிக்கும் போதுதான் பீறிடும்.
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு போ என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லும் இவர்களுக்கு பாகிஸ்தான் தனி நாடக போக எது/யார் காரணம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். ஒரு நொடிக்கு முன்பு பேசியதையே மாற்றி பேசியும், நேற்று நடந்ததை இன்று திரித்து கூறும் இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை திரித்து கூறுவது என்ன சிரமமான காரியமா.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மதம் கண்களை மறைக்க, மனிதம் மரணித்து மிக கொடூரமாக கொள்ளபட்ட வரலாறு அறியாதவர்கள். எஞ்சி வாழ்ந்தவர்களும் தங்கள் வீட்டைவிட்டு, தங்கள் மனிதர்களை விட்டு, அதுவரை தங்கள் மண் என்று எண்ணியிருந்த மண்ணைவிட்டு வெறும் மதம் என்ற பெயரால் புலம்பெயந்தவர்களின் வலி அறியாதவர்கள். பாகிஸ்தானின் பிரிவினையின் போது இதுதான் எங்கள் நாடு என்று இந்தியாவிலேயே தங்கிய இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை , பாகிஸ்தானிலேயே தங்கிய ஹிந்துக்கள் மட்டும் இல்லை பாகிஸ்தாகானிலும் இந்தியாவிலும் வாழும் அனைத்து மனிதர்களும் என் சகோதர சகோதரிகளே.ஒருவர் பின்பற்றும் மதத்திற்காகவும், வாழும் நாட்டிற்காகவும் நான் அவரை வெறுக்கிறேன் என்றால் தவறு அவரிடம் இல்லை. நான் கற்ற கல்வி எனக்கு அறிவை தரவில்லை என்பது தான்.
அரபு நாடுகளிலேயே இஸ்லாமியர்களை அகதிகள் ஆக்கி நாட்டை விட்டு வெளியேற்றும் இஸ்லாமியர்களும், இந்தியாவில் ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைக்கும் கீழாக மதித்து மலக்குழிக்குள் தள்ளும் ஹிந்துக்களும், மற்ற கிறிஸ்துவ நாடுகளை சுரண்டும் கிறிஸ்துவர்களும் மிக தெளிவாய் இருக்கிறார்கள். எல்லோரும் வெறும் மனிதர்கள் மட்டுமே என்பதில். அவர்களின் சுரண்டலுக்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் நம் விரலை வைத்தே மதம் என்ற பெயரில் நம் கண்ணை குத்த வைக்கிறார்கள்.
அனைத்தும் தெரிந்த அதிகார வர்க்கத்திற்கு, எத்தனை முறை கொன்றாலும் மீண்டும் மீண்டும் தலையெடுக்கும் மனிதம் மட்டும் ஒரு புரியாத புதிர் தான்.
Stand up before the nation falls

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக