செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்!


ஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்!மின்னம்பலம : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் மீது டெல்லி போலீஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.
சிஏஏவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது ஏற்கெனவே பல்கலை வளாகத்தில் புகுந்தே போலீசார் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதற்கு போலீஸ் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மாணவர்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது டெல்லி போலீஸ்.
நேற்று மாலை நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்களை பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்தும் நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்றபோது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பிறப்புறுப்பு, மார்பு பகுதிகளில் தாக்குதல் காயம் ஏற்பட்டுள்ளது என்று ஜாமியா சுகாதார மைய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீஸ் மாணவர்கள்மீது கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு நச்சு ரசாயனத்தைக் காற்றில் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. ஜாமியா பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட பிறகு, முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் மற்றும் குமட்டல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல் ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் அஜீம் கூறுகையில், “இது பெப்பர் ஸ்ப்ரே போல் தெரியவில்லை. மாணவர்கள் வயிற்றுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். இது நச்சு ரசாயனத் தெளிப்பு என்று மருத்துவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
முன்னதாக கண்ணீர்ப்புகைக் குண்டு வீசுதல் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்தி வந்த நிலையில் தற்போது போராட்டத்தைக் கலைப்பதற்காக நச்சு ரசாயனத்தைக் காற்றில் கலந்திருப்பது டெல்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக