புதன், 5 பிப்ரவரி, 2020

ரஜினி ஒரு நேர்மையற்ற சுயநலமி மட்டுமல்ல. கோழையான சந்தர்ப்பவாதியும் கூட... சவுக்கு சங்கர்


savukkuonline.com : ரஜினிகாந்த் செய்வதும், சொல்வதும் செய்தியாகும் என்பது ரஜினிக்குத் தெரியும். ரஜினியே எதிர்பார்த்திராத ரசிகர் கூட்டம் இந்தியா கடந்தும் விரிந்திருக்கிறது. இதற்கு அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் அந்த உழைப்பின் பலனை அவர் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவை அதே ரசிகர்கள் முன்னிலையில் அனுபவிக்கிறார்.
கடந்த 4 ஜனவரி அன்று, தர்பார் படத்தின் தெலுங்கு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஒரு அறிவுரை போல இவ்வாறு கூறினார். “கொஞ்சமாக ஆசைப்படுங்கள்”.  இது போல அவ்வப்போது, ரஜினி மனம் போன போக்கில் பல்வேறு பொன்மொழிகளை உதிர்ப்பார்.  ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் சொன்னதை தனக்கு அல்ல என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.
கடந்த வாரம், இந்து நாளேடு, ரஜினிகாந்த் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்வதாக வருமான வரித் துறையிடம் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது.   இதையடுத்து, ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தார்.  பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, வருமான வரி பற்றிய கேள்விக்கு, “நான் ஒரு ஹானஸ்ட் இன்கம் டாக்ஸ் பேயர்.  சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்யவில்லை.  வேண்டுமென்றால் ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”  என்று மட்டும் மழுப்பலாக கூறி முடித்துக் கொண்டார்.

ரஜினியின் இந்த பேட்டி குறித்து பேசிய ஒரு தயாரிப்பாளர், “வருமான வரி ஒழுங்கா செலுத்தறேன்னு சொல்றதுக்கு இந்த ஆளுக்கு தகுதியே இல்ல. கமலும் அஜீத்தும் இதை சொன்னா இதை ஒத்துக்கலாம்.  இந்த ஆளு கருப்புப் பணம்தான் வேணும்னு கேட்டு வாங்கற ஆளு” என்றார்.
அவர் சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டும். திரைத்துறையில் இருப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் பெரிய கதாநாயகர்களில், கருப்புப் பணம் வாங்காத இரு பெரும் கதாநாயகர்கள் அஜீத் மற்றும், கமல்ஹாசன் என்பது.   இவர்கள் தவிர சொற்பமாக சிலரும் இருக்கக்கூடும்.
திரையுலகம் முழுக்கவுமே இயங்குவது கருப்புப் பணத்தில்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  பல்வேறு வழிகளில் உருவாகும் கருப்புப் பணம், ஏராளமாக புழங்கும் இடம் சினிமாதான்.    இதில் நடிக நடிகையரின் ஊதியங்கள் பெருமளவில் கருப்புப் பணத்தில்தான் வழங்கப்படுகின்றன.    பல கோடி ரூபாய் ஊதியத்தை கருப்புப் பணமாக பெறுவதில் நடிகர் நடிகைகளும் தயங்குவதில்லை.  ஏனென்றால், அவர்களுக்கும் நேர்மையாக வரி செலுத்துவதில் விருப்பமில்லை.   பெறும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 30 ரூபாயை வரியாக செலுத்த வேண்டுமென்றால் கசக்கத்தான் செய்யும்.   இப்பாடித்தான் பெரும்பாலான நடிக நடிகைகள், கருப்புப் பணத்தில் ஊதியம் வாங்கி, பின்னாளில் வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கைகளுக்கு ஆளாகி  அல்லுறுகின்றனர்.
‘தர்பார்’ கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்தப் படத்துக்கு லைக்கா நிறுவனம் ரஜினிக்கு கொடுத்த ஊதியம் 118 கோடி ரூபாய் என்று கூறுகிறார், ஒரு சினிமா பைனான்சியர்.   லைக்காவுக்கு ரஜினியை வைத்து இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பமே இல்லை.  ரஜினியினுடைய மகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தின் போது 50 கோடி ரூபாயை கடனாக பெற்றார் ரஜினி.   பணத்தை கொடுத்த லைக்காவின் சுபாஷ் கரன், பணத்தை கேட்டபோது, எந்திரன் 2.0 படத்துக்கு நான் கொடுத்த கால்சீட்டில் பல்வேறு நாட்களை, வீணடித்து விட்டீர்கள்.  பணமாக கொடுக்க முடியாது. வேண்டுமென்றால், டேட்ஸ் தருகிறேன் என்று சொன்னதன் அடிப்படையில்தான் லைக்கா நிறுவனம், ரஜினிக்கு 118 கோடி சம்பளத்தில் தர்பாரை தயாரித்தது.
ரஜினி எப்போதுமே தன் படங்களுக்கான ஊதியத்தை பாதி கருப்புப் பணமாகத்தான் வாங்குவார்.   அரிதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மொத்த பணத்தையும், செக்காக தருகிறேன் என்றால் கூட ரஜினி, எனக்கு கருப்புப் பணமாக கொடுங்கள் என்று கேட்டு வாங்குவார்” என்றார் அந்த சினிமா பைனான்சியர்.
பண விவகாரத்தில் ரஜினியின் நேர்மையின் லட்சணம், திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நிலையில்தான்,  ரஜினி வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று கூறி வருமான வரித் துறை அவருக்கு அபராதம் விதித்தது.   அந்த அபராதம் வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து வருமான வரித் துறை உயர்நீதிமன்றம் சென்றது.  இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை நடத்திய விசாரணையில், ரஜினிகாந்த் பொய்யான கணக்கை வருமான வரித்துறையில் தாக்கல் செய்தது மட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும் பொய் பேசியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
2003-2004ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை, ரஜினி தாக்கல் செய்கிறார்.  அந்தக் கணக்கு நேர்மையானது அல்ல என்று சந்தேகித்த வருமான வரித் துறை அதிகாரிகள், 7 பிப்ரவரி 2005 அன்று ரஜினியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.   சோதனையின் முடிவில் ரஜினி அந்த ஆண்டு கணக்கில் செலவு என்று காண்பித்திருக்கும் தொகை பொய்யானது என்ற முடிவுக்கு வருமான வரித் துறை வருகிறது.
செலவு கணக்காக ரஜினிகாந்த், 18, ராகவேந்திரா அவென்யூ, போயஸ் தோட்டம் என்ற முகவரியில் தொழில் நடத்தி வருவதாகவும், அதற்காக 40 லட்ச ரூபாய் ஒரு வருடத்துக்கு பல்வேறு இனங்களில் (items) செலவானதாகவும் கூறுகிறார்.  ரஜினி தொழில் நடத்துவதாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்த வருமான வரித் துறை அதிகாரிகள், ரஜினி கூறும் முகவரியில் உள்ளது ரஜினியின் வீடு என்பதையும், அந்த இடத்தில் பத்தில் ஒரு பகுதி கூட ரஜினி தொழில் செய்வதற்காக ஒதுக்கப்படவில்லை என்பதையும் கண்டறிகின்றனர்.

தொழில் செய்த காரணத்தால் மின்சார கட்டணம், ரிப்பேர் செலவுகள், பாதுகாப்பு செலவுகள், தொலைபேசி செலவுகள், ஊழியர்களின் மாத ஊதியம், எழுதுபொருள் செலவுகள், போக்குவரத்து செலவுகள், ஆகியவற்றின் காரணமாக 40 லட்ச ரூபாய் செலவானது என்று வருமான வரித் துறையினரிடம் தெரிவித்திருந்தார் ரஜினி.
இதற்கான ஆதாரங்களை சேகரித்த போது, ரஜினி, தொழில் தொடர்பாக இது போன்ற எந்த செலவுகளையும் செய்யவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்து ரஜினியிடம் சுட்டிக் காட்டுகின்றனர்.
ரஜினி இது போல செய்யாத தொழிலை செய்ததாக பொய் கூறியதன் காரணம் என்ன ?   ஏனென்றால் தொழில் தொடர்பாக ஆகும் செலவுகளுக்கு வருமானவரி விலக்கு பெறலாம்.   இப்படி ரஜினி பெற்ற விலக்கு எவ்வளவு தெரியுமா ?  வெறும் 40 லட்சம்.    ரஜினி இந்த 40 லட்சத்துக்காகத்தான் பொய் கூறினார்.
அதிகாரிகள் ஆதாரத்தை கேட்டதும், மொத்த செலவில் 19.75 லட்சத்தை ரஜினி கழித்துக் கொண்டு, அந்த ஆண்டு அதை வருமானமாக காட்டி, அதற்கும் வரி கட்ட ஒப்புக் கொண்டார்.
7 பிப்ரவரி 2005 அன்று ரஜினியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.   அப்போது ரஜினியிடம், நீங்கள் நடிப்பதை தவிர்த்து என்னென்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
“நான் ராகவேந்திரா கல்யாண மண்டபம் மற்றும் அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றை தவிர வேறு எந்த தொழிலும் செய்யவில்லை” என்கிறார்.   நீங்கள் வட்டிக்கு பணம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “சிலருக்கு நான் கடன் கொடுத்திருக்கலாம்.  ஆனால் அது வட்டிக்காக பணம் தரும் பைனான்ஸ் தொழில் அல்ல” என்று தெளிவாக பதில் அளிக்கிறார்.

சசி பூஷண், கோபாலகிருஷ்ண ரெட்டி, முரளி பிரசாத் மற்றும் சோனு பிரசாத் ஆகியோர் யார் என்ற கேள்விக்கு, அவர்கள் எனது நண்பர்கள்.  அவர்களுக்கு நான் பணம் கொடுத்திருக்கிறேன்.  ஆனால் அதை பைனான்ஸ் தொழிலாக கருத முடியாது என்று கூறுகிறார் ரஜினி.  2001-2002 நிதியாண்டில், அர்ஜுன் லால் என்ற பைனான்சியருக்கு 60 லட்ச ரூபாய் கொடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு ரஜினி, என் உதவியாளர் சிவராமகிருஷ்ணனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.   ஒரே ஒரு பைனான்சியருக்கு நான் நிதி அளித்ததால் நான் பைனான்ஸ் தொழில் செய்கிறேன் என்று பொருளல்ல என்று மீண்டும் கூறுகிறார் ரஜினி.
அடுத்து உதவியாளர் சிவராமகிருஷ்ணனிடம், ரஜினியின் பைனான்ஸ் தொழில் பற்றி கேட்டதற்கு, அவர் 6 பேருக்கு கடன் கொடுத்துள்ளார்.  ஆனால், அது பைனான்ஸ் தொழிலுக்காகவா என்பது தெரியவில்லை.    பைனான்ஸ் தொழிலுக்கென்று ரஜினிக்கு தனியான வங்கி அக்கவுண்ட் எதுவும் இல்லை.  ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டும்தான் வைத்துள்ளார் என்கிறார்.
இதன் பிறகு ரஜினி ஒரு புதிய விளக்கத்தை பின்னாளில் அளிக்கிறார்.  “பைனான்ஸ் / வட்டிக்கு பணம் கொடுப்பது என்றால், அடகு வைப்பது மட்டுமே என்று நான் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.   அதனால் நான் இதற்கு முன்னர் பைனான்ஸ் தொழில் செய்யவில்லை என்று சொல்லிவிட்டேன்.  ஆனால் நான் பைனான்ஸ் தொழில்தான் செய்து வந்தேன்.  எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், / நண்பர்களுக்கு மட்டுமே கடன் தருவேன்.

நான் கடன் கொடுக்கும் நபர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விகிதத்தில் வட்டி வாங்குவேன்.”  இதுதான் ரஜினி கொடுத்த விளக்கம்.
ஆனால், வருமான வரித் துறை, ரஜினியின் இந்த விளக்கங்களை ஏற்கவில்லை.  வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காகவே, ரஜினி, மாற்றி மாற்றி பொய் சொல்லுகிறார் என்று முடிவு செய்தது.
ரஜினிகாந்த் நிதி வழங்கும், வட்டிக்கு விடும் தொழில் செய்வதற்காக எந்த லைசென்சும் பெறவில்லை.  இந்த தொழில் நடத்துவதற்காக ரஜினி ஒருவரை கூட வேலைக்கு வைக்கவில்லை.  இந்த தொழில் செய்வதற்காக லைசென்ஸ் அவசியமில்லை என்று ரஜினி சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், ரஜினியே ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.  கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு  நான் பணம் கொடுத்தது பிவி.ரங்காராவ் என்ற ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க.   இந்த பிவி.ரங்காராவ் யார் தெரியுமா ?  முன்னாள் பிரதமர் பிவி.நரசிம்மராவின் மகன்தான் இந்த ரங்காராவ். 

இந்த விவகாரத்தை குறிப்பிடும் வருமான வரித் துறை, இது நட்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன்.  இதை பைனான்ஸ் தொழில் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று முடிவெடுக்கிறது.
மேலும், கோபாலகிருஷ்ண ரெட்டி எழுதிய ஒரு கடிதத்தில், “நீங்களும் (ரஜினிகாந்த்), நானும், பிவி.ரங்காராவும் விவாதித்ததன் தொடர்ச்சியாக, 50 லட்சம், 36 லட்சம், மற்றும் 70 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றுக் கொண்டேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
ரஜினிகாந்த், உண்மையில் பைனான்ஸ் தொழில் செய்திருந்தால், அந்தத் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு, எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டது, வணிக ரீதியான கடனா, வட்டி எவ்வளவு என்பதற்கான பதிவேடுகள் இருக்கும்.  எந்த விதமான பதிவேடுகளும் இல்லாத நிலையில், இதைத் தொழில் என்று எடுத்துக் கொள்ள முடியாது.  மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வட்டிக்கு கொடுத்ததாக ரஜினி கூறுகிறார்.  இது போல ஒருவர் தொழில் செய்ய முடியாது என்றும் வருமான வரித் துறை முடிவெடுக்கிறது.
முதலில் எந்த தொழிலும் செய்யவில்லை என்று கூறிய ரஜினி, பின்னர் தலைகீழாக “நான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தேன்” என்று கூறியது எதற்காக என்பது ரஜினிக்கே வெளிச்சம் என்று வருமான வரித் துறை கூறுகிறது.
வருமான வரித் துறையை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்வதற்காகவேயன்றி, ரஜினி, வேறு எதற்காகவும் இப்படி பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
மேலும் வரி ஏய்ப்பு செய்வதற்காக ரஜினி பொய்யான ஆவணங்களையும் தயார் செய்துள்ளார்.  கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு ரஜினி 15.09.2000, 16.09.2000, 16.10.2000 ஆகிய தேதிகளில் முறையே 50 லட்சம், 70 லட்சம் 36 லட்சம் ஆகிய தொகைக்கான செக்குகளை அளிக்கிறார்.   இந்த காசோலைகளை பெற்றுக் கொண்டேன் என்றும், மூன்று மாதங்களில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றும் கோபாலகிருஷ்ண ரெட்டி ரஜினிக்கு கடிதம் எழுதுகிறார்.  இந்த கடிதத்தின் தேதி 16.10.2001.   செப்டம்பர் 2000த்தில் பெற்ற பணம் 3 மாதத்துக்குள் திருப்பி தருவதாக சொல்லும் கோபாலகிருஷ்ண ரெட்டி,  காசோலையை பெற்றுக் கொண்டேன் என்ற கடிதத்தையே அக்டோபர் 2001ல்தான் எழுதுகிறார்.   மூன்று மாதம் என்றால் டிசம்பர் 2000த்தில்தானே அந்த பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ?

மேலும், கோபாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட ஒரே நபர்களுக்கு, ரஜினி மீண்டும் மீண்டும் பணம் கொடுத்துள்ளார் என்பதே வருமான வரித்துறை ஆவணங்களை பரிசீலித்த பிறகு கண்டறிந்தது.
இந்த கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு தான் கொடுத்த பணத்தில் 1.97 கோடியை  திரும்ப வராது என்று தனக்குத் தெரியும் என்பதை ரஜினி ஒப்புக் கொள்கிறார்.   எதனால் தெரியுமா ?  கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு சொந்தமான டாட்டா சபாரி காரையும், ஒரு சொத்தையும் ரஜினி விற்று அதற்கான தொகையை ரஜினி ஏற்கனவே தன்வசப்படுத்திக் கொண்டிருந்தார்.
வருமான வரித் துறையின் ஆவணங்களை பரிசீலிக்கையில் தெரிய வருவது என்ன தெரியுமா ?  ரஜினி, வட்டிக்கு விடும் தொழில் செய்யவில்லை.  மாறாக கருப்புப் பணத்தை, தனக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் / பண முதலைகளிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கொடுத்து வைத்திருக்கிறார்.  இது கருப்புப் பணத்தை பதுக்கும் எல்லா பண முதலைகளும் செய்யும் அதே பித்தலாட்டம்தான்.
இந்த பித்தலாட்டங்களையெல்லாம் தெரிந்து கொண்டு தான், வருமான வரித் துறை ரஜினிக்கு அபராதம் விதித்தது.  அந்த அபராதம் தொடர்பான வழக்கைத்தான் சமீபத்தில் அத்துறை வாபஸ் வாங்கியுள்ளது.
இது குறித்து பேசிய, பத்திரிக்கையாளர் எஸ்பி.லட்சுமணன், “நான் அறிந்த ரஜினி நேர்மையானவர்தான்.   ரஜினி அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய வரியை செலுத்தியிருந்தாரென்றால், 66 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க நேர்ந்திருக்காது.

எஸ்.பி.லட்சுமணன்.
ஆனால் ரஜினிதான் “சிஸ்டம் சரியில்லை” என்று சொன்னவர்.  ரஜினி சொல்லும் சிஸ்டம் அரசு இயந்திரம்தான்.  இந்த அரசு இயந்திரம் இயங்குவதற்கு வரி வருவாய் என்ற எரிபொருள் தேவை.  எரிபொருள் போன்ற அந்த வரியை ரஜினி ஒழுங்காக செலுத்தாமல் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சிஸ்டம் சரியில்லை என்று சிஸ்டத்தை குறை கூறும் ரஜினிகாந்த், நிச்சயமாக, இத்தகைய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது.   இதுதான் ரஜினி மக்களுக்கு சொல்லித் தரும் ஆன்மீக அரசியலா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்” என்றார் எஸ்பி.லட்சுமணன்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ரஜினியே வருமான வரி குறித்த புகாருக்கு விளக்கம் அளித்து விட்டதால், இதில் கருத்து  கூற ஏதுமில்லை என்று கூறினார்.
ஒருவர் வீட்டு முகவரியில் தொழில் செய்தேன் என்று கூறினாலும், அதற்கென்று தனியான மின் இணைப்பு வேண்டும்.  அதற்குண்டான பணியாட்களுக்கு ஊதியம் அளித்த விபரம் வேண்டும்.  ஊழியர்களின் விபரம் வேண்டும். ஆனால், வெறும் 40 லட்சத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக, ரஜினி, பச்சையாக ஒரு பொய்யை கூறி மாட்டிக் கொண்டார்.
2001-2004 ஆண்டுகளில் ரஜினி திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை.  ஆனால் 2001-2004 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு  முறையே 40.20 லட்சம், 39.51 லட்சம் மற்றும் 36.33 லட்சம் தொழில் ரீதியாக, செலவானது என்று ஒவ்வொரு வருடத்துக்கும் ரஜினி கணக்கு காட்டியுள்ளார்.  இதில் சந்தேகமடைந்துதான் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதிகமாக பணம் சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் அனைவரும், ஆடிட்டர்களின் ஆலோசனைபடி செய்யும் திருட்டுத்தனம்தான் இது.  பலரும் இதை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆன்மீக அரசியல் பேசி, அனைவருக்கும் தேசபக்தி கற்றுக் கொடுக்கும் ரஜினி இப்படி வரி ஏய்ப்பு செய்யலாமா ?   அரசுக்கு செலுத்தும் வரியை ஏமாற்றி, தன் சுயலாபத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கும் ரஜினிக்கு, ஊருக்கு உபதேசம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?
தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அத்தனை நியாயமான போராட்டங்களையும் தேவையில்லாதவை என்று புறந்தள்ளும் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு சார்பான நிலைப்பாட்டையே எடுக்கிறார். இதிலும் கூட சுயலாபம் இருக்குமோ என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
மேலும், வருமான வரித்துறை அவர் மீதான வழக்குகளை கடந்த வாரம் வாபஸ் பெற்றது.  குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் ஏறக்குறைய ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது.  ஆனால் அப்போதெல்லாம் கருத்து தெரிவிக்காத ரஜினி, பொறுமையாக, வருமான வரித்துறை வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்ட பின்னர், பிஜேபியின் குரலாக, CAA/NRCக்கு ஆதரவாக 5 பிப்ரவரி அன்று பேசியுள்ளதையும் தற்செயல் நிகழ்வென்று பார்க்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக