வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

நீதிபதி முரளிதர்... பாஜகவை கலங்கடிக்கும் பச்சை தமிழர்

யார் இந்த நீதிபதி முரளிதர்? மின்னம்பலம் :  டெல்லி வன்முறை ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் வன்முறைக்கு எதிராக காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்ததை அடுத்து நீதிபதி முரளிதரை பணியிட மாற்றம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
இது பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இது வழக்கமான நடவடிக்கைதான். சம்பந்தப்பட்ட நீதிபதி ஒப்புதலுடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி இதற்கான பரிந்துரையை கொலீஜியம் கொடுத்துவிட்டது” என்று விளக்கமளித்திருந்தார்.

நீதிபதி முரளிதர் டெல்லி வன்முறை மட்டுமின்றி பல வழக்குகளில் நேர்மை மற்றும் நியாயமாக உத்தரவுகளை வழங்கினார் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த முரளிதர்?
நீதிபதி முரளிதர் 1984ல் சென்னையில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். 3ஆண்டுகளுக்குப் பிறகு 1987ல் உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். அதன் பின் போபால் எரிவாயு பேரழிவு எனப் பல முக்கிய வழக்குகளில் வாதாடி தனது சட்டப் பணிகளைத் தொடர்ந்து வந்த முரளிதர் 2006ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
டெல்லி உயர் நீதிமன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் படி நீதிபதி முரளிதர் 3100 தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் அல்லது தீர்ப்பு வழங்கிய பெஞ்சில் தானும் ஒரு நீதிபதியாக அங்கம் வகித்துள்ளார் என்று தி பிரிண்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து சீக்கியர்கள் தொடர்பான வழக்கில் காங்கிரஸைச் சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அமர்வில் நீதிபதி முரளிதர் இடம் பெற்றிருந்தார். அதே ஆண்டு மாவோயிஸ்ட்டுகளுக்குத் தொடர்புகள் இருந்ததாகச் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர்கள் கவுதம் நவலகா உள்ளிட்டோருக்குப் பீமா கோரேகான் வழக்கில் ஜாமீன் வழங்கினார்.
2009 ஆம் ஆண்டில் நாஸ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்களை வெளிப்படுத்த ஆர்டிஐ மனுவை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வில் முரளிதர் இடம் பெற்றிருந்தார்.
2018 அக்டோபரில், நீதிபதி முரளிதர் மற்றும் நீதிபதி கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 1987 ல் உத்தரப் பிரதேசத்தின் ஹாஷிம்புராவில் 42 முஸ்லிம்களைக் கொன்றதற்காக 16 முன்னாள் காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இவ்வாறு பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கி 2006ல் இருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி முரளிதர், மூன்றாவது மூத்த நீதிபதியாகவும் இருக்கிறார். நீதிபதி ஜி.எஸ்.சிஸ்தானி ஓய்வுக்குப் பின்னர், முரளிதர் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பார்.
இந்த அளவு அனுபவம் மிக்க மூத்த நீதிபதி ஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் மற்றொரு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அப்படி இருக்கையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகக் கூட இல்லாமல் வழக்கமான ஒரு பணியிட மாறுதல் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக டெல்லி பார் அசோசியேன் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுபோன்ற ஒரு பணியிட மாற்றம் என்பது புனிதமிக்க நீதித்துறைக்கு இழுக்கு விளைவிப்பதாக மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நீதித்துறையைக் கேள்விக்குறியாக்கும் என்று டெல்லி பார் அசோசியேன் நிறைவேற்றிய தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலீஜியம் தனது பரிந்துரையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கடந்த 19ஆம் தேதி வழக்கறிஞர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நேற்று இரவு பணியிட மாற்ற உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணியிடமாற்றம் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அமர்வில் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக