வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சரவண பவன் மேலாளர் தற்கொலை.. மிரட்டிய நிர்வாகம்:.. சம்பள பாக்கி....

மிரட்டிய நிர்வாகம்: சரவண பவன் மேலாளர் தற்கொலை!மின்ன்ம்பலம்:  மிரட்டிய நிர்வாகம்: சரவண பவன் மேலாளர் தற்கொலை!
பிரபல ஹோட்டல் சரவண பவனின், காஞ்சிபுரம் பகுதி மேலாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் நிர்வாகத்தைக் கண்டித்து ஹோட்டல் ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 7) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹோட்டல் சரவண பவன் நிர்வாகம் தனது ஊழியர்களுக்குச் சரிவர ஊதியம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கிளைகளை பரப்பியுள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு காஞ்சிபுரத்தில் மூன்று கிளைகள் இருக்கின்றன. காந்தி சாலை, பேருந்து நிலையம், சென்னை - பெங்களூர் சாலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள 3 கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 மாதமாகச் சம்பளம் கொடுக்கப்படாததால் அவர்கள், காஞ்சிபுர பகுதி மேலாளர் பழனியப்பனுக்கு , ஊதியம் வழங்கக் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். எனினும் சம்பளம் கொடுக்கப்படாமல் அட்வான்ஸ் பணம் மட்டும் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் மூன்று மாத ஊதியத்தை கேட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மேலாளர் பழனியப்பனிடம் ஊழியர்கள், தெரிவித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் சிலருக்கு பழனியப்பன் சம்பளம் போட்டு கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டல் நிர்வாகத்தினர் சம்பளம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், பழனியப்பனை தொலைபேசியில் அழைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு பழனியப்பன் செயலை கண்டித்ததாகவும், வேலையை விட்டு சென்றுவிடும் படி எச்சரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பழனியப்பன், நிர்வாகத்தினர் கண்டித்ததை ஊழியர்களிடம் தெரிவித்து மனகுமறலை வெளிப்படுத்தியுள்ளார். மன உளைச்சலுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பழனியப்பன் ஹோட்டலுக்கு வராததால், அவருக்கு ஊழியர்கள் போன் செய்துள்ளனர். போனிலும் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து காந்தி சாலையில் உள்ள சரவணபவன் முன் குவிந்த ஊழியர்கள் பழனியப்பன் தற்கொலைக்கு ஹோட்டல் நிர்வாகமே காரணம் என்று கூறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சரவண பவன் நிர்வாகம் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மேலாளரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவேண்டும், மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் அவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக