சனி, 1 பிப்ரவரி, 2020

டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்”

 டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்”மின்னம்பலம் : -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சி ஊழலில் விசாரணை, கைது என ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் காவலர் சித்தாண்டி இப்போது வரை சிக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பல அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குருப் 4 முறைகேடு விவகாரத்தில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனுக்கு உடந்தையாக இருந்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி இந்த மோசடிகளுக்கு மூளையாக செயல்பட்ட சித்தாண்டி பற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி இதழில் ஜனவரி 14 ஆம் தேதியன்றே 30 பேரின் பாட்டிக்கு திதி: வெளிச்சத்துக்கு வரும் டிஎன்பிஎஸ்சி வில்லங்கம்! எழுதியுள்ளோம்.
“இப்போது நடந்துள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர் ஒரு போலீஸ்காரர். இவருடைய சொந்த ஊர் பெரியகண்ணனூர். இவருடைய அப்பா ஆளும் கட்சியை சேர்ந்தவர். முன்பு காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து பின்னர் டி.என்.பி.எஸ்.சி-யில் பொறுப்புக்கு வந்த ஒரு அதிகாரிக்கு இவர் கார் ஓட்டியுள்ளார். அதன் பின்னர், சில காலம் வருவாய் துறை அமைச்சருக்கும் இந்த போலீஸ்காரர் கார் ஓட்டியுள்ளார்.
இப்போது, நீதிபதி ஒருவருக்கு கன் மேனாகவும் கார் ஓட்டுனராகவும் இருக்கிறார். இவர் டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கு கார் ஓட்டிய நேரத்திலேயே தலைவருடன் சேர்ந்து பல குறுக்கு வேலைகளை செய்து பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதன் பின்னர் அமைச்சருக்கு கார் ஓட்டியபோதும் ஆளும் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆட்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி மூலமாக வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்” என்று அந்தச் செய்தியில் கூறியிருந்தோம்.
நாம் வெளியிட்ட இந்தத் தகவலையடுத்தே டி.என்.பி.எஸ்.சி. மோசடி வழக்கின் விசாரணையின் திசை தெளிவானது. அந்தக் காவலர் பெயர் சித்தாண்டி டி.என்.பி.எஸ்.சி. 2003 இல் காவலராக தேர்வு பெற்றவர். முதலில் டிஜிபி நடராஜ் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்தபோது அவருக்கு ஓட்டுநராக இருந்துள்ளார். 2003 மார்ச் முதல் ஜூன் வரை நவநீதகிருஷ்ணன் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்தார். பிறகு நவநீத கிருஷ்ணன் ராஜ்யசபா உறுப்பினரானார். அவருக்கும் சித்தாண்டி கார் ஓட்டியுள்ளார். அந்த காலகட்டங்களில் தொடங்கிய இவரது மோசடி இப்போது வரை தொடர்கிறது.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் இருக்கும் தாண்டிக்குடி பகுதியில் ஒரு எஸ்டேட் வாங்கிப் போட்டிருக்கிறார் சித்தாண்டி. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டராக இருந்து இப்போது வேறு வேறு பதவிகளில் இருக்கும் இரு அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் சித்தாண்டி. சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் காரைக்குடி அருகிலுள்ள முத்துப்பட்டினம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பதிவாளராக உள்ளார். அவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சித்தாண்டியின் மனைவியிடமும் விசாரித்து வருகிறார்கள்.
ஆனால் சித்தாண்டி இன்னும் சிக்கவில்லை. ஆந்திரா எல்லையில் தற்போது ‘பத்திரமாக’ இருக்கும் சித்தாண்டி அங்கிருந்துகொண்டே சிபிசிஐடி உயரதிகாரிகள் சிலருக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ‘ஏதோ ஒரு சாதாரண போலீஸ்காரன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க. ஒரு சாதாரண போலீஸால இதெல்லாம் செய்ய முடியுமா? என் மேல கை வச்சீங்கன்னா சி.எம். ஆபீஸ் வரைக்கும் அதிரும். சி.எம். உறவினர்கள்லாம் என் கூட நெருக்கமான தொடர்புல இருக்காங்க. பாத்துக்கங்க’ என்பதுதான் அந்தத் தகவல்.
இதனால் சிபிஐசிடி வட்டாரமே அரண்டு போய் கிடக்கிறது.
-மின்னம்பலம் டீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக