சனி, 1 பிப்ரவரி, 2020

டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! வீடியோ


மின்னம்பலம் : டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா பகுதியில் ஊர்வலம் சென்றவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட கோபால் என்னும் 17 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்திருப்பது பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்துவருகிறது. பெண்கள் உட்பட பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். நொய்டா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தள்ளுபுரா கிராமத்தைச் சேர்ந்த கபில் குஜ்ஜார் என அவரது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜசோலா ரெட் லைட் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதுஅந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அவரை போலீசார் உடனடியாக தடுத்தி நிறுத்தி கைது செய்ததாகவும் துணை காவல் ஆணையர் சின்மயி பிஸ்வால் தெரிவித்துள்ளார்’ என ஏ.என்.ஐ.செய்தி முகமை தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், பாஜகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் “தேச துரோகிகளை- சுட்டுத் தள்ளு” என்று கூட்டத்தினர் முழக்கமிட்டனர். இந்த பேச்சு தான் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு தூண்டுதலாக அமைந்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக