திங்கள், 3 பிப்ரவரி, 2020

வீரபாண்டி ராஜா மாற்றப் பின்னணி.. ஸ்டாலின் முன் கொட்டப்பட்ட .....

ஸ்டாலின் முன் கொட்டப்பட்ட 5 லட்சம்! - வீரபாண்டி ராஜா மாற்றப் பின்னணி!மின்னம்பலம் :   ஆபரேஷன் செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், சேலம் மாவட்ட திமுகவில் உண்மையிலேயே ஆபரேஷன் தான் செய்திருக்கிறார்.
சேலம் மாவட்ட திமுக தலைவர் என்ற அளவுக்கு உயரத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பின்னர், சேலம் திமுகவில் கோஷ்டிக் குழப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. அதன் பின் பல ஆண்டுகளாக மாவட்டப் பொறுப்பாளர் என்ற நிலையிலேயேதான் சேலம் திமுக ஓடிக் கொண்டிருந்தது. கடந்த கட்சித் தேர்தலிலும் இதற்கு முடிவு காணப்படாத நிலையில், அடுத்த கட்சி அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் சேலத்தில் குழப்பங்கள் ஓயவில்லை.

இந்த நிலையில்தான், 'சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, மாவட்டக் கழக பணிகள் செவ்வனே நடைபெற சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பு நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி ராஜாவை கட்சியில் இருந்தே சஸ்பெண்ட் செய்யும் முடிவில் இருந்திருக்கிறார் ஸ்டாலின். இதையறிந்த தலைமைக் கழக நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தியதை அடுத்தே மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாற்றி, தேர்தல் பிரிவு செயலாளர் என்ற டம்மி பதவியைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
வீரபாண்டி ராஜா மீது ஸ்டாலினுக்கு அப்படி என்ன கோப உஷ்ணம் என்று சேலம் திமுகவில் விசாரிக்க ஆரம்பித்தால், குளுகுளு ஏற்காட்டைக் காட்டுகிறார்கள். இதுபற்றி சேலம் திமுகவினரிடம் பேசினோம்.
“சேலம் மாவட்டத்தில் திமுக பெருவாரியான இடங்களை ஜெயிக்க முடியவில்லை. அதிமுக அரசின் செல்வாக்கால் பல இடங்களில் முடிவுகள் மாற்றப்பட்டன. இதை எதிர்த்துதான் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கையன்று இருமுறை மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து எச்சரித்தார்.
ஏற்காடு ஒன்றியம் பழங்குடியின பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் திமுக 3, அதிமுக 3 என்ற அளவில் சமமாக கவுன்சிலர் இடங்களைப் பிடித்தனர். ஆனால் இங்கே அதிமுகதான் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. ஏற்காடு மறைமுக தேர்தல் முடிந்தபின் அங்கிருந்த மூன்று கவுன்சிலர்களில் ஒரு பெண் கவுன்சிலர் அறிவாலயத்துக்குச் சென்றார். ஸ்டாலினை சந்தித்தார். ஸ்டாலின் முன்னால் 5 லட்சம் ரூபாய் பணக் கட்டுகளை வைத்தார். என்னம்மா இது என்று ஸ்டாலின் கேட்க, ‘தலைவரே, ஏற்காடு யூனியன்ல திமுக, அதிமுக ரெண்டும் சரிசமமா இருந்தோம். நான் நாமினேஷன் செஞ்சிருந்தா நிச்சயம் ஜெயிச்சுருப்பேன். ஆனா ஒன்றிய செயலாளர் பாலு என்னை நாமினேஷன் செய்ய வேணாம்னு சொல்லிட்டாரு. கேட்டா மாவட்டச் செயலாளர் ராஜா உத்தரவுனு சொல்றாரு. நான் நாமினேஷன் பண்ணக் கூடாதுனு என்கிட்ட இந்த 5 லட்சத்தைக் கொண்டுவந்து நம்ம கட்சிக்காரங்களே கொடுக்குறாங்க. அப்படின்னா மேல இருக்கிறவங்க என்ன செஞ்சுருப்பாங்க? நான் நின்னு 3-3-னு வந்திருந்தால் குலுக்கல்ல கூடஜெயிச்சுருப்பேன். ஆனால் நான் நிக்கவே கூடாதுனு சொல்லிட்டாங்க’ என்று புலம்பியிருக்கிறார்.

நீ போம்மா நான் பாத்துக்குறேன் என்று சொன்ன ஸ்டாலின் இந்த புகார் பற்றி விசாரித்து உடனடியாக ஏற்காடு ஒன்றிய செயலாளர் பாலுவை நீக்கி உத்தரவிட்டார். அப்போதே வீரபாண்டி ராஜாவையும் கட்சியில் இருந்தே நீக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதன் பின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திலும் ராஜா ஏதோ தன் மேல் எந்தத் தவறும் இல்லை என்றும், தலைமைக் கழகம் கொடுத்த நிர்வாகிகளை வைத்துக் கொண்டு இவ்வளவுதான் செயல்பட முடிந்தது என்றும் பேசினார். இதையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வந்த ஸ்டாலின், ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பையும் தயார் செய்யச் சொல்லிவிட்டார். ஆனால் நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தலையிட்டு, அவ்வளவு அதிரடி வேண்டாம் என்று சொல்லியதால்தான் இந்த ஆபரேஷன் கொஞ்சம் டோஸ் குறைவாக நடந்திருக்கிறது” என்று முடித்தார்கள்.
வீரபாண்டி ராஜா சென்னையில்தான் இருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக