சனி, 29 பிப்ரவரி, 2020

மலேசியா புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு

புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு
முஹைதீன் யாசின்
மாலைமலர் : மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன.
பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாதீர் முகமது பிரதமரானார். இதன்மூலம் அவர் உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹ ராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார்.

அந்த கூட்டணியின் சார்பில் இது தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று வரும் மே மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ஆட்சி பொறுப்பை இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

ஏபெக் மாநாட்டுக்கு பிறகே தம்மால் பதவி விலக இயலும் என மகாதீர் முகமது கூறியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மகாதீர் முகமது அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது. இதனால் அன்வரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிய ஆட்சி அமைப்பார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, திடீர் திருப்பமாக பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி வைத்தார். அவரது உத்தரவின் பேரில் இடைக்கால பிரதமராக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அனுபவமுள்ள அரசியல்வாதி முஹைதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முஹைதீனுக்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக நம்புவதாகவும், அவர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார் என அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக