சனி, 29 பிப்ரவரி, 2020

சிஏஏ-ரஜினி தெளிவாக இருக்கிறார்: ஹஜ் தலைவர்!

மின்னம்பலம் :  சிஏஏ தொடர்பாக ரஜினி தெளிவாக புரிந்து வைத்துள்ளதாக ஹஜ் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், ‘சிஏஏவை திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. என்ன போராட்டம் நடத்தினாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இஸ்லாமிய இயக்கங்கள் ரஜினியை சந்தித்து சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க இருப்பதாக தகவல் வெளியாகின.
ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழ்நாடு ஹஜ் தலைவர் அபூபக்கர் இன்று (பிப்ரவரி 29) நேரில் சந்தித்துப் பேசினார். சிஏஏவால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், இஸ்லாமியர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை என்பது குறித்து அவர் ரஜினிகாந்திற்கு எடுத்துரைத்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபூபக்கர், “இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பேன் என்றது 30 கோடி இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. அத்தோடு டெல்லி வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்ததற்கு இஸ்லாமியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன். இதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை. சிஏஏ பற்றி நாம் அவருக்கு புரியவைக்க வேண்டிய தேவையில்லை. சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் குறித்து ரஜினி ஆழ்ந்த புரிதலோடுதான் உள்ளார். நமக்கு விளக்கம் அளிக்கக் கூடிய அளவு தெளிவாக தெரிந்துவைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
ரஜினியைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் சகோதரர்கள். தொப்புள் கொடி உறவுகளுக்குள் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார் என்றும் அவர் கூறினார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக