செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கனிமொழி மத்திய பஜகாவால் குறி வைக்கப்படுகிறார்.. சட்ட ரீதியாக சிக்கவைக்க சதி நடக்கிறது?

டிஜிட்டல் திண்ணை:  டார்கெட் கனிமொழி - டெல்லி திட்டம்!மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: டார்கெட் கனிமொழி - டெல்லி திட்டம்!
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழகத்தில் சிஏஏ போராட்டங்கள் தீவிரமாக இருக்கின்றன. இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களை ஒருபக்கம் உணர்வெழுச்சியாக நடத்துகிறது என்றால்... சிஏஏவுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக யார் யார் பேசுகிறார்கள் என்ற குறிப்பை மத்திய அரசின் உளவுத் துறை ஒவ்வொரு நாளும் கலெக்ட் பண்ணி வருகிறது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர் கனிமொழி. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பலரைப் போல மேலோட்டமாகப் பேசாமல் அந்தச் சட்ட மசோதா, அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, மக்களவை, மாநிலங்களவை என உடனடியாக நிறைவேற்றப்பட்டு இரவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது வரை பேசும் கனிமொழி... அதனால் எதிர்காலத்தில் யார் யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கி வருகிறார். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபடும் யாரையும் ஆவணங்களில் சந்தேகம் என்றும் சொல்லி குடியுரிமை இல்லாமல் ஆக்க முடியும் என்று கனிமொழி பேசிவருகிறார். அண்மையில் சட்டமன்றத்தில் முதல்வர், ‘குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு?’என்று கேள்வி எழுப்பியபோது அவருக்குச் சட்டமன்றத்துக்கு வெளியே பதில் சொன்னதும் கனிமொழியே.

தமிழ்நாடு மட்டுமல்ல... புதுச்சேரி, கேரளம் என தென்னிந்தியா முழுவதும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக பாஜகவின் அஜெண்டாவுக்கு எதிராக பேசி வருகிறார் கனிமொழி. பிரதமரும், பாஜகவினரும்தான் பாகிஸ்தான் பெயரை அதிகம் உச்சரிக்கிறார்கள் என்றும் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்குப் போகட்டும், நாம் இந்தியாவில்தான் இருப்போம் என்றும் கனிமொழி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் சிஏஏ மீதான இதுபோன்ற தெளிவான கருத்தியல் தாக்குதல்களில் முக்கியமான தாக்குதல் கனிமொழியுடையது என்று மத்திய உளவுத் துறை பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் கனிமொழியைச் சட்ட ரீதியாகச் சிக்கவைக்க ஏதேனும் விவகாரங்கள் இருக்கிறதா என்று கடந்த மாதம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறது அமலாக்கத் துறை.
இதுபற்றி டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘திமுக முக்கியப் புள்ளிகளை மத்திய அரசு நிறுவனங்களான சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் விசாரிக்கும் அளவுக்கு விவகாரங்கள் இருக்கிறதா என்று தேடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மலேசிய நிறுவனமான சங்கல்பம் என்ற நிறுவனம் பற்றி தன்னிடம் இருந்த பழைய ஃபைலை மீண்டும் தூசு தட்டியெடுத்திருக்கிறது அமலாக்கத் துறை.
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான சண்முகநாதன், அவர் மனைவி கல்பனா இருவரும் தங்களது இரு பெயர்களும் இருக்குமாறு தொடங்கிய நிறுவனம்தான் சங்கல்பம். இந்த நிறுவனம் சென்னை மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இரண்டு சொத்துகளை வாங்கியது. பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.35 கோடி. சென்னை சொத்தின் மதிப்பு சுமார் ரூ.32 கோடியும், ஊட்டி சொத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடியும் ஆகும்.
இந்தச் சொத்துகளை வாங்க இரும்புத் தாது விற்பனைக்கு முன்கூட்டியே பெறப்பட்ட ரூ.9 கோடி பணத்தைக் கணக்கில் காட்டியுள்ளது சங்கல்பம். மேலும் கொல்கத்தா சார்ந்த நான்கு நிறுவனங்களிலிருந்து ரூ.19 கோடி முதலீடு செய்யப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறது.
இரும்புத் தாது ஏற்றுமதி செய்வதற்காக 9 கோடி ரூபாய் பெற்றதாகச் சொல்லும் சங்கல்பம் நிறுவனத்திடம் இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய உரிமமே இல்லை. அது குறிப்பிட்ட கொல்கத்தாவின் நான்கு முதலீட்டாளர் நிறுவனங்களும் போலி நிறுவனங்கள் என்று கூறுகிறது அமலாக்கத் துறை. இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இந்த நிறுவனத்தோடு கனிமொழியை தொடர்புபடுத்தி அவரை விசாரணைக்கு அழைக்கலாமா என்பதுதான் இப்போதைய டெல்லி திட்டம்’ என்கிறார்கள்.
திமுக தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டுவிட்டது. கனிமொழிக்கும் சங்கல்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவே இதில் கவலைப்பட ஏதுமில்லை’ என்றனர்.
தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் தமிழக முதல்வர் ஆக முடியாது என்று பேசி வருகிறார் பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ். இது தேர்தல் கணக்கின்படி பேசப்படுவதல்ல, வேறு வழிகளில் திமுகவை அதிரவைக்க பாஜக திட்டம் தீட்டியிருக்கிறது. மேலும் பிரசாந்த் கிஷோரும், ‘தேர்தலில் ஜெயித்துவிட்டாலும் கூட ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்வதைத் தடுக்க பாஜக கடுமையான முயற்சிகளைச் செய்யும்’ என்று ஸ்டாலினிடமே கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் மகாராஷ்டிர, டெல்லி தேர்தல் தோல்விகளால் தமிழகத்தில் ஸ்டாலின் மீதான நடவடிக்கைகளைச் சற்றே நிறுத்தி வைத்திருக்கும் பாஜக, இப்போது கனிமொழியை நோக்கி கண்வைக்க ஆரம்பித்துவிட்டது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக