செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

BBC டெல்லி வன்முறை: உயிரிழப்பு 10 ஆக உயர்வு - தொடரும் பதற்றம் - LIVE


குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.
டெல்லி ஜிடிபி மருத்துவமனையின் கண்காணிப்பாளரான சுனில் குமார், கடந்த 24 மணி நேரத்தில் ஜிடிபி மருத்துவமனையில் 150 காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து மூன்று பேரை கைது செய்துள்ளதாக அம்மாநிலத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பி டி ஐ செய்தி முகமை, புதானாவில் உள்ள ஜோலா கிராமத்தின் ஒரு வயல் வெளியில் ஆயுத உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் நேபாள் சிங் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக இயங்கிய இந்த தொழிற்சாலையின் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தி, அங்கிருந்து ஒன்பது கைத்துப்பாக்கிகள், ஆறு மஸ்கட் துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையின்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர், தப்பிய இருவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இதே மாவட்டத்தில் உள்ள சர்தவால் கிராமத்திலும் சட்டவிரோதமாக இயங்கிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.

"எல்லோரும் டெல்லி வன்முறை ஓய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். உள்துறை அமைச்சர் (அமித்ஷா) சந்திப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தார். அந்த சந்திப்பு நேர்மறையாக இருந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் நகரில் அமைதி திரும்புவதை உறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது". என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாகத் தெரிவித்துள்ளது
கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் சிலர் கற்களை குவித்து வைத்து எறிவதை காண முடிகிறது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார். மேலும் பாலம் ஒன்றின் மேல் நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்த சில செய்தியாளர்கள் மீது கல் எறியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கிடையில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களும் கேட்டன.
தற்போது மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் முழக்கமிட்டு செல்கின்றனர். இந்த கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார்.



சாந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 2 மணி அளவில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.





இந்நிலையில், டெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகவும், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை இன்று காலையில் கூட்டினார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், ''அமைதி காக்க வேண்டுமென டெல்லி மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். வட கிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கவலை கொண்டுள்ளோம். இந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் இறந்துள்ளனர். பல கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன. இது துரதிஷ்டவசமானது'' என்று தெரிவித்தார்.




''பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடங்களில் போதுமான போலீசார் இல்லையென்றும், உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வரும்வரை போலீசாரால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் என்னிடம் தெரிவித்தனர்'' என்று மேலும் கூறினார்.
முன்னதாக, டெல்லி காவல் அதிகாரிகள், மத்திய உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள் பின்னிரவில் அவசரமாக ஆலோசித்திருந்தார்.
டெல்லி காவல் துறை டெல்லி அரசின்கீழ் இல்லாமல், மத்திய உள்துறையின் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் அதிகாரிகளுடன் இன்று இன்னொரு கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.




களத்திலிருந்து பிபிசி செய்தியாளார்

விநாயக் கெய்க்வார்ட்



தனது கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள, அவரது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது கோகுல்புரியில் கும்பல் ஒன்றால் தாம் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக ஆம்புலன்சில் இருந்த சர்ஃபராஸ் தெரிவித்தார்.
"அவர்கள் என் பெயரை கேட்டார்கள். நான் வேறு பெயரை சொல்ல முற்பட்டேன். ஆனால் அவர்கள் என் கால் சட்டையை கழற்ற சொன்னார்கள். என் பெயர் சர்ஃபராஸ் என்று கூறினேன். உடனே கம்பிகளால் என்னைத் தாக்கியத்துடன், என்னை நெருப்பின் மீது தள்ளினார்கள்," என்கிறார் சர்ஃபராஸ்.
ஹாசன் மற்றும் சத்ய பிரகாஷ் என்பவர்கள் டெல்லி அரசு அவசர ஊர்தி சேவையில் பணிபுரிகின்றனர்.



மெஹர் மருத்துவமனையிலிருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், சர்ஃபராஸ் என்ற நோயாளியை ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டதாகவும் ஹாசன் தெரிவித்தார்.
நான் அந்த பகுதியின் உள்ளே செல்ல அஞ்சினேன். எனவே காயமடைந்தவரை நான் அந்த பகுதியிலிருந்து வெளியே வர சொன்னேன். அப்போதுதான் சர்ஃபராஸின் சகதோரர் மற்றும் பிறர் அவரை அவசர ஊர்திக்கு அழைத்து வந்தனர் என்கிறார் ஹாசன்.
முன்னதாக, சீலம்பூரில் குண்டு காயம்பட்ட சுபாஷ் மோஹல்லா என்பவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது நான் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்தேன் சத்ய பிரகாஷ் வாகனத்தை செலுத்தினார். அப்போது சிறிது தூரம் சென்ற பிறகு அவர்கள் வண்டியை தாக்கினர். இரும்பு கம்பியால் ஜன்னலை உடைத்தனர். அவர்கள் அது அவசர ஊர்தி என்றும்கூட கவலைப்படவில்லை. அது டெல்லி அரசாங்கத்தின் அவசர ஊர்தி. இந்த சேவையில் இந்து என்றோ முஸ்லிம் என்றோ நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. ஆனால் இதை யாரும் யோசிப்பதில்லை."




போராட்டம் நடைபெற்ற இடத்தில் வசிக்கும் மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அந்த போராட்டம் முதலில் அமைதியாக நடந்து கொண்டிருந்தது பின் திடீரென கல் வீச்சு நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் எண்ணிக்கை போலீஸாரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது எனவே போலீஸார் அங்கிருந்த உள்ளூர் மக்களை உதவிக்கு அழைத்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீஸாருடன் சேர்ந்து கொண்டனர். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோதே சிறிது தூரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், வாகனம் ஒன்றை தீ வைத்து எரித்தனர். அங்கு அருகாமையிலிருந்தவர்களிடம் நான் பேச முற்பட்டேன் ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை.
"போராட்டக்காரர்களில் ஒருவர், நாங்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமைதியைதான் விரும்புகிறோம். இங்கே யாரும் வன்முறையை விரும்பவில்லை. திங்களன்று நடைபெற்ற போராட்டத்துக்கு பிறகு மக்கள் அச்சதுடன் உள்ளனர். நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அரசமைப்பு முறையில் அமைதியாக போராடுவோம். இந்த அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி கொடுக்க வேண்டும்," என போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சூழல் கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அருகாமை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முக்கிய சந்திப்புகள், பதற்றமான இடங்களில் போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வன்முறை நடைபெறவில்லை என்றும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வன்முறை தொடங்கியது எப்படி?

வடகிழக்கு டெல்லியின் மோஜ்பூர் பகுதியில் டிசம்பர் மாதம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர்கள், சனிக்கிழமை, ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராடத் தொடங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
போராட்டம் காரணமாக அங்கு மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த சாலைகளும் மூடப்பட்டன.
ஞாயிறன்று ஜாஃபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவானவர்கள் பேரணியாக செல்லத் தொடங்கியதும் பதற்றம் உண்டானது.
ஊடங்கங்கள் மற்றும் சமூக ஊடங்களில் வெளியான காணொளிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரான போராட்டக்காரர்கள் கற்களை வீசிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதை பார்க்க முடிகிறது.




இதனால் ஏற்பட்ட வன்முறைகளில் வடகிழக்கு டெல்லியின் பகுதிகளில் கடைகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் மற்றும் படங்களும் ஊடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
பொது மக்களின் சொத்துகளை தீக்கிரையாக்கி, சூறையாட முயன்ற கூட்டத்தை கட்டுப்படுத்த தாங்கள் தடியடி நடத்த வேண்டி இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

திங்கள் கிழமை என்ன நடந்தது?

திங்கள் மதியம் மற்றும் மாலையில் நடந்த வன்முறை சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி கோகுல்புரி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான மற்றும் எதிரானவர்கள் இடையே நடந்த மோதலில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதாகவும், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
இறந்த போலீஸ் கான்ஸ்டபிளான ரத்தன் லால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும், கடந்த 1998-இல் டெல்லி போலீசில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்தார் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.




ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
முகமது சுல்தானின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவரது காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த மற்றொருவரான ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் ஆல்வி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''என் சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இன்றைய போராட்டத்தின்போது அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
ஜாபராபாத்தில் காவல்துறையினர் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காவல்துறை சொல்வது என்ன?

வட கிழக்கு டெல்லியில் உள்ள சாந்த்பாக் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் சல்மான் ரவி, அங்குள்ள நிலையை விவரிக்கையில், "இந்த பகுதியை விட்டு மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். வாகனங்களும், மக்களும் விரைவாக இந்த இடத்தை விட்டு செல்வதை காண முடிகிறது" என்று கூறினார்.
வட கிழக்கு டெல்லியின் இணை போலீஸ் ஆணையரான வேத் பிரகாஷ் சூர்யா நடந்த சம்பவங்கள் குறித்து கூறுகையில், ''மோதலில் ஈடுபட்ட இரு தரப்புகளிடமும் நாங்கள் பேசினோம். தற்போது இங்கு அமைதியான சூழல் காணப்படுகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

பாஜக தலைவர் மீது புகார்

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    ஞாயிறன்று வன்முறை தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் "ஜாஃபராபாத் மற்றும் சாந்த்பாக் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்ப செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்," என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
    ""ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்," என்றும் அவர் கூறியிருந்தார்.
    2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா, கட்சியுடனான மோதலால் 2019இல் பாஜகவில் இணைந்தார்.

    மக்கள் அச்சத்தில் உள்ளனர் - டெல்லி அமைச்சர்

    டெல்லியில் நடக்கும் தீவைப்பு மற்றும் வன்முறை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் கோபால் ராய் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திக்க திங்கள் இரவு நீண்ட நேரம் காத்திருந்தனர். எனினும் துணை நிலை ஆளுநர் அமைச்சரை சந்திக்கவில்லை.
    வன்முறை நடக்கும் சில பகுதிகளில் காவல் துறையினர் இல்லை என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று கோபால் ராய் கூறியிருந்தார்.
    துணை நிலை ஆளுநரின் அதிகாரிகள் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தம்மிடம் கூறியுள்ளதால் தாம் திரும்ப செல்வதாக செவ்வாய் அதிகாலை கோபால் ராய் கூறியுள்ளா

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக