வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்… மதுரையில் நடத்திய ரகசிய கூட்டம் காரணமா?

விஜய்vikatan.com - நமது நிருபர் : நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த விசாரணையின் பின்னணியில் மதுரையில் நடைபெற்ற ரகசியக் கூட்டம் ஒன்று காரணமாகச் சொல்லப்படுகிறது. 2006-ல் வெளிவந்த `திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் சக்சஸ் தயாரிப்பாளராக அறிமுகமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘எங்கேயும் காதல்’, ‘அனேகன்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த `பிகில்’ திரைப்படம், வியாபார ரீதியாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் பட்டையைக் கிளப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இதைப் பல முன்னணி சினிமா விமர்சகர்களும், பி.ஆர்.ஓக்களும் தங்களது சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டிருந்தனர்.



Kalpathi House
Kalpathi House
இந்நிலையில், இன்று காலை 10:20 மணியளவில் ஏ.ஜி.எஸ். சினிமா நிறுவனத்தை நடத்தும் `கல்பாத்தி இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை தொடங்கியது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கல்பாத்தி அகோரம், சுரேஷ், கணேஷ் ஆகியோரின் வீடு, ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனத்தின் தி.நகர் அலுவலகம், அவர்களின் நான்கு திரையரங்குகள், ஏ.ஜி.எஸ். குளோபோ ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.ஜி.எஸ். பவர் அண்ட் லைட் பிரைவேட் லிமிடெட், பே லீப் போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் என 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த அதிரடிச்சோதனையில் சுமார் 110 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.




தி.நகரிலுள்ள கல்பாத்தி அகோரத்தின் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, `பிகில்’ படத்திற்குச் செலவழித்த கணக்கு விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில், `பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தொகை குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நடிகர் விஜய்யிடம் விளக்கம் பெற வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும், இதற்காகத்தான் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. மேலும், நடிகர் விஜய்யை மேல் விசாரணைக்காக சென்னை அழைத்து வருகின்றனர். தனது சொந்த ஜாக்குவார் காரில் ஏற முற்பட்ட விஜய்யை தடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களது இன்னோவா காரில் ஏற்றி சென்னை அழைத்து வருகின்றனர். விஜய்யின் சாலிகிராமம் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.


விஜய்
வருமானவரிக் கணக்கில் காட்டாத பணத்தை நடிகர் விஜய் சம்பளமாக வாங்கியிருப்பதாகத் தெரியவந்தால், அவர் மீது தனியாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெறும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வருமானவரி விசாரணையின் பின்னணியில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் காய் நகர்த்தல்களும், அதனால் ஏற்பட்ட எதிர்வினையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.



இதுகுறித்து நம்மிடம் பேசிய விஜய் மக்கள் மன்ற மூத்த நிர்வாகிகள் சிலர், “கடந்த மாதம் 20-ம் தேதி மதுரை மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இன்பராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள எஸ்.ஏ.சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் சென்றனர். முதல் நாளே மதுரை சென்று ஓட்டலில் தங்கிவிட்டார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் வருவதை முன்னிட்டு தஞ்சாவூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஓட்டலில் குழுமியிருந்தனர். அந்த நிர்வாகிகளை தனியாக அழைத்து ரகசியக் கூட்டம் நடத்திய சந்திரசேகர், அரசியல் தொடர்பான சில ஆலோசனைகளை அளித்துள்ளார். ‘நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன், என் மகனுடன் பேசுவேன்’ என அவர் பேசியது நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் பேசிய முழு விவரங்களும் மத்திய, மாநில அரசின் மேலிடங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டன. இதன் ரியாக்‌ஷன்தான் இந்த அதிரடி வருமானவரித்துறை விசாரணை.



ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் அடித்தளத்திற்காகத் தான் இந்த ஏற்பாடு நடந்தது. எங்கள் தளபதி விஜய்யும் அவரது அப்பா சந்திரசேகரும் பேசிக்கொள்வது கிடையாது. தீவிர அரசியலில் குதிக்க சந்திரசேகர் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், தளபதி விஜய் பெரிய ஆர்வம் காட்டியதில்லை. `மக்கள் பிரச்னையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்று எங்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் ஆலோசனை மட்டும் வழங்குவார். இன்று தமிழகம் சந்தித்திருக்கும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளால், அவர் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



முன்பு ஒருமுறை, புதுக்கோட்டையில் ஒருவிழாவுக்குப் போயிருந்தபோது, ரசிகர்களை மகிழ்விப்பதற்காகத் திறந்தவெளி வேனில் விஜய் ஊர்வலம் சென்றார். புதுக்கோட்டையே குலுங்கியது. சென்னையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2009-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த விஜய் ஆசைப்பட்டார். ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாள். அன்றைய தினம் அவர் மேடை ஏற திட்டமிட்டிருந்தார். இதற்காக மாநாடு நடத்த பணம் கட்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாநாடு நடக்கவில்லை. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதுபோலத்தான், அப்போதும் கூட யாரோ முட்டுக்கட்டை போட்டார்கள். இப்போது சட்டமன்றத் தேர்தலில் அவர் வரக்கூடும் என்று பயந்து ரெய்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். படப்பிடிப்புக்காகச் சென்றவரை, நெய்வேலி வரை சென்று விசாரிக்க வேண்டிய அவசரம் என்ன… அவர் என்ன ஓடியா விடப் போகிறார்… இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை” என்கிறார்கள்.

விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் ஆனந்திடம் பேசியபோது, “இன்றுதான் நெய்வேலியில் `மாஸ்டர்’ படபிடிப்பு தொடங்கியது. ரெய்டு பற்றிக் கேள்விப்பட்டோம். எங்களிடம் எல்லாமே க்ளியராக இருக்கிறது. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் சுருக்கமாக!
விஜய்யும் இனிமேல் அரசியலுக்கு வந்தாகவேண்டும்போல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக