வியாழன், 6 பிப்ரவரி, 2020

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்மின்னம்பலம் : சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகளை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஏஏ, என்.பி.ஆரை ஆதரிப்பதாக நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பீதி ஏற்படுத்தப்பட்டதாகவும், சில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு தீவிரமாக யோசிக்க வேண்டும். எஃப்ஐஆர் போட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் எனவும் எச்சரித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் பாஜகவின் குரலாக ஒலிப்பதாக குற்றம்சாட்டினர்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 6) செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற சட்டங்கள் நாட்டு மக்களுக்கு - குறிப்பாக இஸ்லாமியப் பெருமக்களுக்கு, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடியவையாக உள்ளன. எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வினர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மையினருக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க. மட்டுமல்ல. பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 12 உறுப்பினர்களும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அடிமை அ.தி.மு.க. அரசு அதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.
மத்திய அரசும், தமிழக அரசும் செய்திருக்கும் இந்தத் துரோகத்தை உணர்ந்து, அவர்கள் கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும், அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளும், பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராக தங்கள் உணர்வை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகின்றனர் என்பதை நானே கல்லூரிகளுக்கு நேரில் சென்ற போது பார்க்க முடிந்தது.
ஏதோ கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் என்று நிறுத்திக் கொள்ளாமல், இந்தப் பணியை இன்னும் முடுக்கிவிட்டு, உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அந்தப் பணியைப் பார்வையிட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
ரஜினியின் கருத்து தொடர்பான கேள்விக்கு, “போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ரஜினி கூறியுள்ளார். இந்த சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை ரஜினிகாந்த் ஆழ்ந்து சிந்தித்து, யோசித்து, முடிவெடுத்திருக்க வேண்டும். இந்த சட்டங்களில் உள்ள கொடுமைகளை, கஷ்டங்களை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. புரிந்துகொண்டால் மாற்றிச் சொல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக