ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

நேரு பதவியேற்பு: வருத்தத்தோடு பாலு பங்கேற்பு!

நேரு பதவியேற்பு:  வருத்தத்தோடு பாலு பங்கேற்பு!மின்னம்பலம் : திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவை திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அறிவித்தார்.
மறுநாளே அறிவாலயத்துக்கு வந்து வாழ்த்து பெற்ற நேரு, திருச்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இருப்பதால் உடனடியாக திருச்சி சென்றார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 1ஆம் தேதி) மாலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இருக்கும் முதன்மைச் செயலாளரின் இருக்கையில் முறைப்படி நேருவை அமரவைத்துப் பதவியேற்கச் செய்தார் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் பதவியை விட்டுச் செல்லும் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தன் பதவியைப் பறித்து கே.என்.நேருவுக்குக் கொடுத்ததில் உள்ளபடியே டி.ஆர்.பாலுவுக்குக் கோபம் இருந்தது. அதனாலேயே பொறுப்பை விட்டுச் செல்லும்போது முதன்மைச் செயலாளரின் அறையைப் பூட்டி, சாவியை கையோடு எடுத்துச் சென்றுவிட்டார் டி.ஆர்.பாலு. நேருவுக்குப் பதவி வழங்குவதற்கு முன்னரே பாலுவை அழைத்து ஸ்டாலின் ஆலோசித்த நிலையிலும் அவருக்குக் கோபமும் வருத்தமும் இருந்தது. இதுபற்றி, நேருவுக்கு முதன்மைச் செயலாளர்: போராடிய ஸ்டாலின், கோபம் குறையாத டி.ஆர்.பாலு என்ற செய்திகளில் நாம் விரிவாக எழுதியிருக்கிறோம்.
இந்த நிலையில் நேரு முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி திமுக வட்டாரத்திலேயே எழுந்தது. கடந்த 30ஆம் தேதி பிற்பகல் அறிவாலயத்துக்குச் சென்ற டி.ஆர்.பாலு, வாடிய முகத்துடன் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில்... நேற்று நேரு பதவியேற்கும் நிகழ்ச்சியின்போது உடன் இருந்தார் டி.ஆர்.பாலு.
ஆனாலும் யாரிடமும் சிரித்துப் பேசாத டி.ஆர். பாலு சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறினார். நேருவுக்கு வாழ்த்துச் சொல்ல திரண்டிருந்த கூட்டத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த டி.ஆர்.பாலு, அந்தக் கூட்டத்தின் இடையே ஸ்டாலினை நெருங்க முடியாமல் தொட்டுக் கூப்பிட்டு, ‘நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக