ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ்: மூடப்படும் எல்லைகள், 300 பேர் பலி - இதுவரை நடந்தவை என்ன? - விரிவான தகவல்கள்

BBC : கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 304 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் 294 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும் அங்கு புதிதாக 2,590 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை சேர்த்தால் மொத்தம் 14,380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தரவுகளைவிட, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது. வுஹான் நகரத்தில் 75,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சீனாவிற்கு வெளியேவும் நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்படும் எல்லைகள்&; உலக நாடுகள் பல, சீனா நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாடுகள் கூறுகின்றன.
சீனாவிற்கு சென்று திரும்பிய வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் தடை விதித்துள்ளன.
>இதற்கு முன்னதாக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சீனா சென்று திரும்புவர்களுக்கு தடை விதித்தது.

"இதுபோன்று தடை விதிப்பது, எந்த நன்மையும் விளைவிக்காது. மாறாக இதனால் பிரச்சனைதான் அதிகரிக்கும்" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.
உலக நாடுகள் எல்லைகளில் அதிகாரபூர்வமாக மருத்துவ பரிசோதனை செய்து மக்களை அனுமதிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. ஏனெனில், சட்டத்துக்கு புறம்பாக பயணிகள் ஒரு நாட்டிற்குள் நுழைந்தால், அது வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையை வெளிநாட்டு அரசாங்கங்கள் பின்பற்ற மறுப்பதாக சீனா விமர்சனம் வைத்துள்ளது.
"உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சைகை நல்லதல்ல" என்று சீனாவின் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.


  • சீனாவிற்கு சமீபத்தில் சென்று திரும்பிய வெளிநாட்டவர்களுக்கு தங்கள் எல்லையை மூடியுள்ள அமெரிக்கா, ஹூபே மாகாணத்திற்கு சென்று திரும்பிய அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தங்குவதற்கான வசதியை ஏற்பாடு செய்துத்தர அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பெண்டகன் முன்வந்துள்ளது.
  • அமெரிக்காவில் இதுவரை எட்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சீனாவில் இருந்து 300 இந்தியர்கள் மற்றும் 100 ஜெர்மனியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
  • வரும் நாட்களில் தங்கள் நாட்டினரை சீனாவில் இருந்து வெளியேற்ற தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
  • சீன குடிமக்கள் விசா இல்லாமல் சுற்றுலாவுக்காக உள்நுழையும் வசதியை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
  • மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
  • சீனாவின் அதிபரிடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
  • சீனாவில் ஆப்பிள் தனது ஷோரூம்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

அச்சத்தில் ஹாங்காங்

இந்நிலையில் சீனாவுடனான எல்லையை மூடாவிட்டால், திங்கட்கிழமையிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ஹாங்காங் மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி எல்லைகளை மூட, ஹாங்காங் அரசு மறுத்துவிட்டது.
2003ஆம் ஆண்டு தாக்கிய சார்ஸை, கொரோனா வைரஸ் தாக்குதல் விஞ்சிவிட்டது. ஆனால், இதில் சார்ஸை காட்டிலும் குறைந்த உயிரிழப்புகள் ஏற்படுவதால், கொரோனா வைரஸ் அவ்வளவு கொடூரமானதாக இருக்காது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக