சனி, 15 பிப்ரவரி, 2020

சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்

tamil.oneindia.com :  சென்னை  வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
 குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை முதல்  போராட்டம் நடத்தி வந்தனர். 
இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்றனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 
காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், சிலரை அடித்து உதைத்ததால் கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த களேபரங்களுக்கு நடுவே சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். 
அவர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று பிற போராட்டக்காரர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமர்ந்து விட்டனர். இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி, தமிழகம் முழுக்க இஸ்லாமிய அமைப்பினர் ஆங்காங்கு இரவோடு இரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். 
சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தால் கத்திப்பாரா சந்திப்பு முதல் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பலவற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்றதை பார்க்க முடிந்தது. திருவண்ணாமலை, வந்தவாசி, மதுரை, நெல்பேட்டை, கோரிப்பாளையம், திருப்பூர், தாராபுரம், திருவள்ளூர், செங்குன்றம், திருச்சி பாலக்கரை போன்ற பகுதிகளிலும் தேனி போடி மெட்டு தொகுதிகளிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. >

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக