வியாழன், 6 பிப்ரவரி, 2020

9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100 சதவீதம் உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது - முக ஸ்டாலின்

மாலைமலர் : சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10-ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
2015 -16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான  சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும்,  2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

9, 10ம் வகுப்பு மாணவர்களின் இடை நிற்றலில் ஏற்பட்ட நூறு சதவீத உயர்வை அப்படியே மறைத்து, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும்?

எனவே, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாணவர்களின் இடைநிற்றலுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வுசெய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான, ஆரோக்கியமற்ற சூழல் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக