திங்கள், 3 பிப்ரவரி, 2020

சீனா 304 பேர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் ... பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 304 ஆனது பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் பலிதினத்தந்தி : பெய்ஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியில் முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் இறந்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதுதவிர 14,562 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. இவர்களில் 2,110 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 19,544 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 328 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் இறந்துள்ளார். அவரும் உகான் நகரை சேர்ந்தவர்தான். 44 வயதான அவர் உகானில் இருந்து ஹாங்காங் வழியாக கடந்த 21-ந் தேதி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இது சீனாவுக்கு வெளியில் நடைபெற்றுள்ள முதல் பலியாகும்.

இதற்கிடையே சீன பாரம்பரிய மருத்துவத்தில் மலர்ச்செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவ மருந்து கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்ப்பதாக உள்ளது என்ற தகவல் பரவியது. இதனால் அந்த மருந்தை பலரும் ஆர்வத்துடன் வாங்க தொடங்கி உள்ளனர். அதேசமயம் உடனடியாக இந்த மருந்து பற்றி சந்தேகமும் எழுந்துள்ளது.

சீன அரசும் தொழில்முறை வல்லுநர்களின் வழிகாட்டுதல் இன்றி பாரம்பரிய மருந்தை உட்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது.

ஆஸ்பத்திரிகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் சீன ஆஸ்பத்திரிகளும், நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளன. மக்களின் செல்போன்களில் வீடியோ அல்லது குரல் அல்லது உரைநடை மூலம் இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

உகான் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்ஷோவ் நகரில் 265 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த நகரில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டும் 2 நாட்களுக்கு ஒருமுறை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லலாம். நீச்சல் குளம், சினிமா தியேட்டர், அருங்காட்சியகங்கள் போன்ற அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தியா, அமெரிக்கா, இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகள் உகான் நகரில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்கிறது. போலந்து பிரதமர் தங்கள் நாட்டு குடிமக்கள் ஹுபெய் மாகாணத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு இதுவரை உகானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்துச்செல்ல முன்வரவில்லை. உகானில் உள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் நாஹ்மனா ஹாஷ்மி, தங்கள் நாட்டு மாணவர்கள் உகானில் இருந்து அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். அப்படி அழைத்துச் சென்றால் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தரமான மருத்துவ வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

வங்காளதேசம் சீன மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு விசா வழங்குவதை ஒரு மாதத்துக்கு ரத்து செய்துள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்துல் மோமென் நேற்று அறிவித்தார். ஏற்கனவே பல நாடுகள் சீனாவுக்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக