வெள்ளி, 3 ஜனவரி, 2020

கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்: பொன்.ராதாகிருஷ்ணன் கொலை மிரட்டல் வீடியோ

மின்னம்பலம் : திமுக கூறுவதால் யாரும் கோலம் போட்டுவிடாதீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்: பொன்.ராதாகிருஷ்ணன்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் வீடுகளுக்கு முன்பாக நோ சிஏஏ, நோ என்ஆர்சி, நோ என்பிஆர் என்ற வாசகங்களுடன் கோலம் வரைந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறிது நேரத்துக்குப் பின்னர் விடுவித்தனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், கோலம் போட்டதற்காகவெல்லாம் கைது செய்யப்படுவார்களா என இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் இல்லங்களில் கோலம் வரைந்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இருப்பினும், கோலம் வரைந்தவர்களை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோலம் வரைந்த பெண்களில் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (ஜனவரி 2) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கோலம் போட்ட பெண்களின் லட்சணம் தெரிந்துவிட்டது. கோலம் போட்ட பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவர் என்று காவல் துறை அதிகாரி வெளிக்காட்டி இருக்கிறார். இதுதொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கோலம் போடக் கூறுவதாக, திமுகவினரின் பேச்சைக் கேட்டு யாராவது தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டால், அவர்களின் குடும்பம் குளோஸ், குண்டு வைத்துவிட்டு போய்விடுவார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் இழந்தவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த கட்சியை சேர்ந்தவர்கள் நாங்கள். அந்த இழப்பு உங்கள் குடும்பங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் கூறுகிறேன். கோலம் போடுவதாகக் கூறி அலங்கோலமாக மாறிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மாணவர்களின் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்து கல்வந்தால் வெளியே இருந்து குண்டு உள்ளே போகும் என்று ஹெச்.ராஜா சர்ச்சையாக பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், “குண்டு போடுவோம் என்றெல்லாம் ஹெச்.ராஜா சொல்லவே இல்லை. காம்பவுண்டுக்கு உள்ளே இருந்து கல் வீசினால் வெளியே இருந்து காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். அப்படியென்றால் குண்டு உள்ளே தான் செல்லும். அந்த அர்த்தத்தில்தான் ஹெச்.ராஜா சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக