வெள்ளி, 3 ஜனவரி, 2020

தேர்தல் அதிகாரியை தெறிக்க விட்ட திமுக எம்.பி செந்தில்குமார் ..BBC வீடியோ

மின்னம்பலம் : தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தருமபுரியில் தேர்தல் அதிகாரியிடம் எம்.பி செந்தில்குமார் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2ஆவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், திமுக முன்னிலையில் இருந்த பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வெற்றியை அறிவிக்க மறுப்பதாகவும், திமுக வெற்றிபெற்ற இடங்களில் சான்றிதழ்களை வழங்காமல் அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் தருமபுரி ஒன்றியம் நியூ காலனி மற்றும் பழைய தருமபுரி ஒன்றிய 8 மற்றும் 18ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், திமுக வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்துவிட்டு, சற்று நேரத்தில் அதனை மாற்றி அதிமுக வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர் என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்த தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், தேர்தல் அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தபால் வாக்குகள் யார் முன்னிலையில் எண்ணப்பட்டன என்று கேள்வி எழுப்பிய செந்தில் குமார், “ நீங்கள்தான் ரிட்டனிங் ஆபிசர். நாங்கள் சொல்வதுதான் பைனல் என்று நீங்கதானே சொல்றீங்க. ரூல் புக்கையும் எடுத்து காண்பிக்கிறீங்கள்ல. ஏஜெண்டுகள் முன்னிலையில் எண்ணப்பட்டதா சொல்றீங்க? நான் எங்கள் தரப்பு ஏஜெண்டை கூப்பிடுறேன். அவங்க முன்னாடி நீங்க எண்ணுனத நிரூபிக்கிறீங்களா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மிரட்டாதீங்க சார் என்று தேர்தல் அதிகாரி கூற, “நீங்க சரியா பண்ணியிருந்தா நான் ஏன் சார் மிரட்டப் போறேன். டிஎஸ்பிய விட்டு ஏன் சார் எங்க கட்சிக்காரங்கள அடிச்சீங்க” என்றவர், நீங்கள் நியாயமாக நடந்திருந்தால் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்க சார். உங்கள கேள்வி கேக்குற மாதிரி ஏன் நடந்துகிறீங்க. தபால் ஓட்டு ஏஜெண்டு முன்பு எண்ணப்பட்டதுனு சொல்றீங்க. அவங்கள கூப்பிட்டு நிரூபிச்சு எங்கள கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளுங்க சார்? என்று சொல்கிறார். மேலும், “ஏன் சார் தலைகுணிஞ்சு நிக்குறீங்க. கோர்ட்டுல போய்ட்டு பாத்துகோங்கன்னு மட்டும் சொல்றீங்க. கோர்ட்டுக்கு போக எங்களுக்குத் தெரியாதா” என்று ஆவேசமாக கேட்க, தேர்தல் அதிகாரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக