ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் ..கார்த்திகேயன் பார்வையில் ...

Karthikeyan Fastura : ஈரான் முப்படைத் தளபதி சுலைமானி அமெரிக்க ட்ரோன்
தாக்குதலால் கொல்லப்பட்டார். இது உலகம் முழுக்க பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஈரானின் அதிபர் அல்-குமேனிக்கு அடுத்த மிக அதிகாரம் மிக்க ஒரு நபர். இன்னும் சொல்லப்போனால் வளைகுடா நாடுகளில் முக்கிய சூத்திரதாரி இவர். சிரியா போருக்கு முன்புவரை ஈரான் மற்றும் அமெரிக்கா எலியும் பூனையுமாக இருந்தவை. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வளர்ச்சிக்குப் பிறகு ஈரானும் அமெரிக்காவும் ஒரு பொது எதிரிக்காக உளவுத் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். ஆரம்பத்தில் இதற்கு ஒத்துப் போன சுலைமானி அமெரிக்காவின் இந்த புது உறவை கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமாக பார்க்க தொடங்கினர்.
அல்-குமேனியை விட சுலைமானி தீவிர இஸ்லாமிய சித்தாந்தவாதி என்கிறார்கள். அமெரிக்காவின் புது உறவினால் சுலைமானுக்கு இயல்பாகவே அதிபரின் மீது கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு தரப்பு சுலைமானிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தலைமைக்கும் ரகசிய உறவு இருந்ததாகவும் சொல்கிறது. இதை அமெரிக்கா உளவு நிறுவனம் சிஐஏ அல்-குமேனியின் காதுகளுக்கு கொடுத்து எச்சரித்திருக்கிறது. இருந்தபோதும் ஈரான் அதிபரால் சுலைமானியை எதுவும் செய்ய முடியாது. அதற்குக் காரணம் அவரது அதிகாரம், மக்களிடையே செல்வாக்கு, ராணுவ பலம் மற்றும் இஸ்லாமிய நெட்வொர்க்.
வளைகுடா பகுதியில் சுலைமானுக்கு தெரியாத ரகசியங்கள் எதுவும் இல்லை.
அமெரிக்காவை முற்றிலுமாக வளைகுடா நாடுகளிலிருந்து கிளப்புவது தான் ஒரே இலட்சியம் என்று செயல்பட்டார். மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு தான் என்றாலும் சுலைமானி அளவுக்கு மற்றவர்களுக்கு தீவிரம் கிடையாது. மேலும் சுலைமானி அளவிற்கு புத்திகூர்மையுள்ள ராணுவ தளபதிகள் யாரும் இல்லை. இதுதான் அமெரிக்காவை நெருஞ்சி முள் போல உறுத்திக் கொண்டிருந்தது.
பொதுவாக இது போன்ற பவர் சென்டர் ஆட்களை அவ்வளவு எளிதாக போட்டுத் தள்ளிவிட முயற்சிக்க மாட்டார்கள். ஏனென்றால் அது இரு பக்கமும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால். ட்ரம்ப் எதையும் யோசித்து முடிவெடுக்க தெரியாத ஒரு அவசரக்குடுக்கை. சுலைமானின் செயல்பாட்டில் ஏதோ ஒன்று அமெரிக்க ராணுவத்தையும் தூண்டி விட்டிருக்க வேண்டும். அதனால்தான் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு மூன்றாம் உலகப் போர் வந்துவிடுமோ என்று சிலர் அச்சத்துடன் எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த அளவிற்கு எல்லாம் இது செல்லாது. வளைகுடா முழுக்க அமெரிக்காவுடன் முழு அளவில் வர்த்தக தொடர்பு வைத்திருக்கிறது. ஏற்கனவே பொருளாதாரம் மந்தத்தில் இருக்கும் வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா ஒருவகையில் சிறுநன்மையே செய்திருக்கிறது. சின்னதாக ஒரு டென்ஷன் ஏற்படுத்தி அதன்மூலம் குருடாயில் விலையை ஏற்றி இருக்கிறது.
போர் பற்றிய அச்சத்தினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சடாரென உயர்ந்திருக்கிறது(ஆனால் இது வெகு காலத்திற்கு இருக்காது மீண்டும் அதன் இந்த ஆண்டுசராசரிக்கு வந்துவிடும்).
இதனால் இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து 71.80 ரூபாய்க்கு வந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4% உயர்ந்திருக்கிறது. இது பிற பொருட்களின் விலைவாசி உயர்விலும் சற்று எதிரொலிக்கும். இதுதான் உலக பொருளாதார அரசியல். எங்கோ ஒருவரின் இறப்பு உலக சாமானிய மக்களின் அன்றாட பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது என்றால் உலகம் எப்படியாக ஒரு பெரும் வலைப்பின்னலில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
(இயற்கையும் இதுபோன்ற வலைப்பின்னல் கொண்டிருந்தாலும் ஒரு மூலையில் நடக்கும் ஏதோ ஒரு விஷயம் மற்றொரு இடத்தில் தாக்குவதற்கு வெகு காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் மனிதனின் இன்றைய வலைப்பின்னல் அடுத்த வினாடியே தாக்கும் என்பதுதான் அச்சமூட்டும் விஷயமாக அறிவியலாளர்கள் பார்க்கிறார்கள்)
பொருளாதார வர்த்தக உலகில் ஈரானில் நடந்த இந்த தாக்குதலை சற்று கவலையோடு பார்த்தாலும் கைமீறி சென்றதாக நினைக்கவில்லை. ஆகவே பெரும் அச்சம் எதுவும் தேவையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக