ஞாயிறு, 5 ஜனவரி, 2020

நீட் தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின்மின்னம்பலம் : மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனுத் தாக்கல் செய்தது. 2020ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 6 கடைசித் தேதி என்ற நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பது நீட் தேர்வை ரத்து செய்ய நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று, காட்டிக் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்ற நான்கு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு நடுப்பகல் நாடகத்தை முதல்வர் பழனிசாமி நாணமின்றி அரங்கேற்றியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 1.2.2017 அன்று இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் 18.2.2017 அன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், அலட்சியமாக இருந்த அரசு அதிமுக அரசுதான். இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதைப் பேரவைக்குச் சொல்லாமல் மறைத்து- “திருப்பிதான் அனுப்பியுள்ளார்கள். காரணம் கேட்டிருக்கிறோம்” என்று சமாளிப்புக்காக விதண்டாவாதம் நடத்தி- மத்திய அரசின் விளக்கம் வந்ததும் தமிழக அரசே வழக்குத் தொடுக்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததும் அதிமுக ஆட்சிதான். “மீண்டும் நீட் மசோதா நிறைவேற்றச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்”என்று சட்டமன்றத்தில் அறிவித்தவர் முதல்வர் பழனிசாமிதான். ஆனால் மூன்று வருடங்களாக மத்திய அரசிடமிருந்து விளக்கமும் பெறவில்லை. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையும் கூட்டவில்லை. இரு மசோதாக்களையும் நிராகரித்ததை எதிர்த்து இதுவரை வழக்கும் தொடுக்கவில்லை.
மசோதாவிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசை எதிர்த்து வழக்குப் போட்டால், தனது முதல்வர் பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில்- இப்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். முதல்வர் பழனிசாமிக்குக் காலம் கடந்து நினைவு பிறந்திருந்தாலும், இந்த வழக்கிலாவது முறைப்படி மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி- கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக