செவ்வாய், 14 ஜனவரி, 2020

எஸ்.ஐ வில்சன் கொலையில் பொன்.ராதாவுக்கு தொடர்பு: அப்பாவு

எஸ்.ஐ கொலையில் பொன்.ராதாவுக்கு தொடர்பு: அப்பாவுமின்னம்பலம் : எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
காவல் துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் காரணம் என பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து பேட்டியளித்துவந்தனர். ஒருபடி மேலே சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், ‘பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது’ என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணன் மீதே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், எம்.சாண்ட் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே தான் அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்.இப்போது கூட கேரளாவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தே கொலையாளிகளை தேடுகின்றனர். தனது சுயநலத்துக்காகவும், மணல் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளாமல் மறைக்கவுமே சி.சி.டி.வி கேமராக்களை இயங்காமல் தடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவுக்கு சட்டவிரோதமாக தினமும் 500 லாரிகளில் போலி எம்.சாண்ட் மணல் கடத்தும் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆட்களே சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று சந்தேகம் எழுப்பியுள்ள அப்பாவு, “மணல் கடத்தல் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்த எஸ்.ஐ வில்சனை குண்டர்களை வைத்து கொலை செய்துவிட்டு, பழியை வேறு யார் மீதாவது போட்டுவிடலாம் எனத் திட்டமிட்டே தி.மு.க கூட்டணி மீது குற்றம்சாட்டி வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “தமிழக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆட்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக