சனி, 18 ஜனவரி, 2020

சமூக வலைதளங்கள் எல்லா தனிமனிதர்களுக்கும் ஒரு பொதுவாழ்க்கை உருவாகி இருக்கிறது.

Don Ashok -Ashok.R : நான் ஆர்குட் காலத்தில் இருந்து பல குழுக்களில் உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் இருந்திருக்கிறேன். ஒற்றுமையாக இருந்த பெரும் குழுக்கள் கல்லெறியப்பட்ட காக்கைக் கூட்டமாய்ச் சிதறுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். உற்ற அண்ணனாக இருந்தவர்கள் வேறு கட்சி மாறினாலும் அண்ணனாகவே இருப்பதையும் பார்த்திருக்கிறேன், ஒருகாலத்தில் ஒன்றாய் இருந்த அண்ணன்கள் இப்போதும் ஒரேகட்சியில் இருந்தாலும் கால ஓட்டத்தில் சல்லிப்பயல்கள் ஆனதையும் பார்த்திருக்கிறேன். உற்ற நண்பர்களாக நான் நினைத்தவர்கள் துரோகம் செய்து "யாரோ போல்" ஆகியதையும் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தெல்லாம் நான் கற்றுக்கொண்டது ஒரே ஒரு பாடம்தான். நிற்க.
சமூக வலைதளங்கள் வந்தபின் எல்லா தனிமனிதர்களுக்கும் ஒரு பொதுவாழ்க்கை உருவாகி இருக்கிறது. அதை அவரவர் எழுத்துத் திறனுக்கேற்ப விரிவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி விரிவாகும்போது பலர் அறிமுகம் ஆவார்கள். பலர் நம்மைப் பின்தொடர்வார்கள். பலர் நம்மை அமைதியாகக் கவனிப்பார்கள். பலர் நம்மைத் தூக்கி விடுவார்கள். பலர் நம்மைப் புறக்கணிப்பதன் மூலம் அற்பசுகம் காண்பார்கள். பலர் நம்மைப் போற்றுவார்கள். பலர் நம்மைத் தூற்றுவார்கள்.
ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றிலும் பொதுவான விஷயம் என்பது 'பலர்'. இந்தப் 'பலர்' என்பது மக்கள். மக்கள் கூட்டம் விரிவடையும்போது அவர்களின் ஈகோவையும் நாம் சரியாக ஹேண்டில் செய்ய வேண்டியிருக்கும். மிகமிக நல்லவர்களுக்குக் கூட மிக அதிகமான ஈகோ உண்டு. அது மனிதனின் அடிப்படைத் தன்மை. அதும் ஒரு வகையில் சுயமரியாதைதான். அதைத் தெரியாமல் கூட சீண்டிவிடக் கூடாது. அதை பிடுங்கியெறிந்து அழிக்கவும் தேவை இல்லை. தடவிக்கொடுத்து வளர்க்கவும் தேவை இல்லை. தேவை இல்லாதவற்றைப் பேசி அதைச் சீண்டாமல் இருந்தாலே போதும், அதுபாட்டுக்கு ஒரு ஓரமாக இருக்கும்.

குழுவாகச் செயல்பட நினைப்பவர் யாவரும் முதலில் கற்க வேண்டியது இந்தப் பாடத்தை தான். இது தெரியாமல் இருந்தால் நீண்டநாளைக்கு, ஆண்டுகளுக்கு ஒரு குழுவாக ஒருங்கிணையவே முடியாது. அதிலும் அறிவுடையோர் நிறைய இருக்கும் குழு என்றால் ஈகோவும் நிறைய இருக்கத்தான் செய்யும். கரும்பு வேண்டும், கணு வேண்டாம் என்றால் எப்படி?
என் முதல் சிறுகதைநூல் 2013ல் வெளியிட்டேன். அந்நூலை நான் நாம் தமிழர் கட்சியில் பொறுப்பில் இருக்கும் மணிசெந்தில் அண்ணன் அவர்களுக்கு dedicate செய்தேன். ஏனென்றால் ஆர்குட் காலத்தில் என்னை எழுதத் தூண்டியவர் அவர்தான். 20 வயதில் மிகப்பெரிய குழு ஒன்றுக்கு நிர்வாகி ஆக்கியதும் அவர்தான். அவர் போகிறபோக்கில் செய்துபோயிருக்கலாம். ஆனால் அது அந்த வயதில் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும், தன்னம்பிக்கையும் மிகப்பெரியது. அதுதான் பின்னர் அவரையும் அரசியல் ரீதியாகத் தாக்கும் துணிச்சலை எனக்குக் கொடுத்தது. ஆனால் இதில் மிக அழகான விஷயம் என்னவென்றால் நான்தான் அவரைப் பற்றி பேசிக்கொண்டே திரிவேனே தவிர அவர் ஒருநாளும் நான் தான் அசோக்கை உருவாக்கினேன் என சொல்லிக்கொண்டதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொல்லிக்கொண்டே இருந்திருந்தால் எனக்கு ஈகோ வந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
முட்டாள்களுக்குத்தான் ஈகோ இருக்காது. அவர்கள் அமைதியாக பாஜகவிலோ, அதிமுகவிலோ செம ஒற்றுமையாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நம்மவர்கள் அப்படி இல்லையே! "கலைஞரை முதல்வராக ஏற்கிறேன். தலைவராக ஏற்க மாட்டேன்," எனச் சொன்ன பேராசிரியர் நம் இயக்கம்தானே! அவர் ஈகோ நெருப்பை, தன் செயல்பாடுகளால், அரவணைப்பால், மிக முக்கியமாக தன் தன்னடக்கத்தால் அணைத்தவர் அல்லவா கலைஞர்!! அவரிடமிருந்து நாம் கற்கவேண்டாமா?
இதைக் கற்கவில்லை என்றாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. மிகத் தீவிரமாக நம்மைப் பின்பற்றும் 100 பேரைச் சம்பாதித்திருப்போம். ஆனால் ஆயிரம் பேரை இழந்திருப்போம்.
"நான் 1800ல் எழுதினேன், அவர் 1801ல்தான் எழுதினார், அவர் பெரியவர், இவர் சிறியவர், அவர் பேரரக்கர், அவர் சிறிய அரக்கர். இவர்தான் ஆணிவேர், இவர்தான் நுனிப்புல். இவர்தான் தாய். இவர்தான் சேய்," என்றெல்லாம் பேசிக்கொள்வதையும், அதை வைத்து சண்டைகள் நடப்பதையும் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நாமெல்லாம் அரக்கர்கள்தான். ஆனால் அதைவிட முக்கியம் நாமெல்லாம் நண்பர்கள் என்பதுதான். நம் அனைவரின் முன்னேற்றத்திலும் அனைவரின் பங்கும் இருக்கிறது.
குறிப்பு: "உனக்கென்ன தெரியும்? சிலபேரு எங்க பொறுமைய சோதிக்கிறாய்ங்களே," என சிலர் பொறுமுவது கேட்கிறது. ஆமாம், உங்கள் பொறுமையைச் சோதிப்பார்கள். நீங்கள் அமைதியாக இருந்தாலும் உங்கள் ஈகோவை நோண்டுவார்கள். கடுப்பேற்றுவார்கள். ஆனால் எதற்கும் ரியாக்ட் செய்யாதீர்கள். அன்ஃபாலோ செய்யுங்கள். அடுத்தகட்டமாக ப்ளாக் செய்துவிட்டு உங்களுக்கு ஒத்துவரும் நண்பர்களோடு மட்டும் சேர்ந்துகொண்டு நிம்மதியாக இருங்கள். அவ்வளவுதானே!!!
-டான் அசோக்
ஜனவரி 18, 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக