சனி, 18 ஜனவரி, 2020

தோழர் சோழனை' படித்து விட்டு விமர்சியுங்கள். மகிழ்ச்சி அடைவேன்... சிவசங்கர் எஸ்.எஸ் முன்னாள் எம் எல் ஏ

சிவசங்கர் எஸ்.எஸ் : "தோழர் ஹரன் பிரசன்னா" அவர்களுக்கு,
அமேசான் 'pen to publish' போட்டி குறித்து தாங்கள் எழுதியுள்ள கருத்துகள் 100 சதவிகிதம் சரி. எழுத்தின் தரம் குறித்துக் கணக்கில் கொள்ளாமல் விற்பனை, விமர்சனம், படிக்கப்பட்டுள்ள பக்கங்களை கணக்கில் கொண்டு அமேசான் முதல் சுற்று வெற்றியை அறிவிப்பதாக அறிகிறேன்.
ஆனால் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அமேசான் இந்தப் போட்டியை நடத்துவதே, "அமேசான் கிண்டிலை" பிரபலப்படுத்திக் கொள்ளத் தான். அதனால் அவர்கள் விறபனையை தான் குறி வைப்பார்கள்.
தங்கள் நூல் விற்பனையாக வேண்டும் என்பதும், அதன் மூலம் முதல் சுற்றில் நுழைய வேண்டும் என்பதும் நூல் எழுதியவர்களின் விருப்பமாக இருக்கும். அப்படி இருந்தால் தான் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
அதனால் விற்பனை அதிகரிக்க, நூல் எழுதியவர்கள் தாங்கள் நூல் எழுதியதை விளம்பரப்படுத்துவது தவிர்க்க இயலாதது. அப்படி வெளியில் சொல்லா விட்டால், புதிய எழுத்தாளர்கள் நூல் எழுதியதே தெரியாமல் போய் விடும்.
விளம்பரத்தை கண்டு, புத்தகத்தை வாங்கும் புதியவர்கள் அமேசானில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாங்குவார்கள் என்பது அமேசானின் வியாபார கணக்கு.

அமேசான் pen to publish, கிட்டத்தட்ட பபாசியின் புத்தகக் கண்காட்சி போல தான். அரங்குக்கு வெளியே வைக்கப்படும் பேனர்கள், பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் செய்திகள் போல தான் , நூல் எழுதியவர்கள் முகநூலில் விளம்பரப் படுத்திக் கொண்டது.
என்ன தான் மணிரத்தினம் படமாக இருந்தாலும், புதிய இயக்குனர் படமாக இருந்தாலும் விளம்பரம் தவிர்க்க இயலாதது. அப்ப தான் படம் ஓடும், இல்லன்னா பப்படம் தான்.
உலகம் சுற்றும் மோடியாக இருந்தாலும், உள்ளூரில் ஓட்டு கேட்டு தான் ஆக வேண்டும். ஃபேக் அய்டி வைத்து முகநூலில் எதிராளிகளை ட்ரோல் செய்து தான் ஆக வேண்டும். ஷாங்காய் பேருந்து நிலையத்தை சூரத் பேருந்து நிலையம் என போட்டோ ஷாப் செய்து தான் ஆக வேண்டும். மார்க்கெட்டிங் அவசியம்.
அதனால் உங்களை சங்கடப்படுத்தும் 'புத்தக மார்க்கெட்டிங்' என்பது தவிர்க்க இயலாதது.
நீங்கள் விருப்பப்படும், நீங்கள் தரமான எழுத்து என நம்புபவைகளுக்கு, 'சாகித்ய அகாடமி' போன்ற பரிசுகள் உள்ளன. அது அவர்களுக்கு, அமேசான் இவர்களுக்கு.
அடுத்து உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் எழுதிய புத்தகம் அமேசான் போட்டிக்கு வருகிறதென்றவுடன் நீங்கள் அடித்த கமெண்ட் , என் நூலுக்கு சிறந்த விளம்பரமாக அமைந்தது. இவர் விமர்சிக்கிறாரென்றால் அப்படி என்ன தான் இருக்கிறதென பார்ப்போமென முனிரத்தினம் சுந்தரமூர்த்தி போன்றவர்கள் வரவேற்பு கொடுத்தார்கள். அது நூறு நூல்கள் விற்பனையை கொண்டு வந்து சேர்த்திருக்கும்.
எக்ஸ் எம்.எல்.ஏ என்றவுடன் யாரோ என நினைத்து வீட்டீர்கள் போல. தாங்கள் பணியாற்றும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "மக்களோடு நான்" நூலின் ஆசிரியன் அடியேன் தான். அந்த நூல் வெளியிடும் முன்பே என் எழுத்துகளை படித்தவர் கிழக்கு பதிப்பக நிர்வாகி பத்ரி சேஷாத்ரி.
 நூல் வெளியிடுவது குறித்து பேசிய போது, "உங்க எழுத்து சேலபிள்" என தெரிவித்தார். இதை அப்போதே நான் எழுதி இருக்கிறேன்.
இப்போது தங்கள் விரல் விமர்சித்த "தோழர் சோழன்" முதல் சுற்றில் தேறி, இரண்டாம் சுற்றுக்கு வந்து விட்டது.
உடனடியாக 'தோழர் சோழனை' டவுன் லோட் செய்து படித்து விட்டு விமர்சனம் செய்யுங்கள். மகிழ்ச்சி அடைவேன்.
எந்நூல் யார்யார் வாய் கேட்பினும் அந்நூல் படித்து விமர்சிப்பதே சிறப்பு !
டிஸ்கி: கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "மக்களோடு நான்", அந்திமழை பதிப்பகம் வெளியிட்ட " சோழன் ராஜா ப்ராப்தி" ஆகிய எனது இரு நூல்களும் அமேசானில் தற்போது கிடைக்கின்றன. படித்து மகிழுங்கள்.
# உடனே வாங்கி, படியுங்கள் அமேசான் முதல் சுற்றில் தேர்வான "தோழர் சோழன்" !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக