செவ்வாய், 21 ஜனவரி, 2020

பதில் சொல்ல குரல் வேண்டுமா? கோடியை வென்ற கோடீஸ்வரி!

பதில் சொல்ல குரல் வேண்டுமா? கோடியை வென்ற கோடீஸ்வரி!மின்னம்பலம் : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளியான கௌசல்யா என்பவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கோடீஸ்வரி. முழுக்க முழுக்க பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் கலந்துகொண்டார். வாய் பேசவும் காது கேட்கவும் முடியாத இவர் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் கல்வி கற்றவர். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.
எந்த குறையும் சாதனை புரிய தடையாக அமைவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக விளையாடினார்.
பதில் சொல்வதற்கு குரல் வேண்டாம் என்பதை உணர்த்தி அதிர்வுகள் மற்றும் வாய் அசைவின் மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு 15 கேள்விகளுக்கும் சரியான விடையளித்து கோடீஸ்வரி ஆக மாறியுள்ளார். இந்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியைத் தான் பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கு அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த சாதனை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எழும்பூரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அந்த பரிசுத் தொகைக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது. அதில் கலர்ஸ் தமிழின் வர்த்தகப் பிரிவு தலைவர் அனூப் சந்திரசேகரன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டுள்ள கௌசல்யா தற்போது நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக