செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிஏஏ தேவையற்றது: வங்கதேசம், ஆப்கன் கருத்து!

மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கன் முன்னாள் பிரதமர் ஹமீது கர்சாய் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். சிஏஏ தேவையற்றது: வங்கதேசம், ஆப்கன் கருத்து!பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிஏஏவுக்கு எதிராக அண்டை நாடுகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அபுதாபியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கஃல்ப் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அவரிடம் இந்தியா கொண்டுவந்த சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியாவின் உள்விவகாரம் என்று வங்கதேசம் தொடர்ந்து கூறிவருகிறது. இந்திய அரசு ஏன் அதைக் கொண்டு வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. அது தேவையற்ற ஒன்று. எனினும், என்ஆர்சி இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்திய அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது, 2019 அக்டோபரில் நான் டெல்லிக்குச் சென்றபோது பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எனக்கு உறுதியளித்து இருந்தார்” என்று கருத்து தெரிவித்தார்.
துன்புறுத்தல் காரணமாக சிறுபான்மையின மக்கள் வங்கதேசத்தை விட்டு வெளியேறவில்லை என்று குறிப்பிட்ட அவர், “ஆனால், இந்தியாவுக்குள் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்” என்றும் கூறினார். மேலும், “இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவு, தற்போது சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹமீத் கர்சாய் டெல்லியில் தி இந்து ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் நாட்டில் மத ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் யாருமில்லை. நாட்டில் நீண்ட காலமாக நடந்துவரும் போரினால் நாட்டிலுள்ள மூன்று முக்கிய மதங்களான இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் என முழு நாடுமே துன்புறுத்தப்படுகிறது. சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கும் சமமாக நீட்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவில் எதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்குக் குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது இருக்கலாம். அது பற்றி கருத்து சொல்ல முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, ‘தன்னை ஒரு பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுத்துள்ளன’ என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சர்வதேச அளவிலும் சிஏஏ தொடர்பாக கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக