செவ்வாய், 14 ஜனவரி, 2020

பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நீக்கம் ’: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

பர்வேஸ் முஷாஃரப்BBC : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், முஷாரஃபுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் மூலம், முஷாரஃப் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார் என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

இருந்த போதும், இந்த வழக்கை மற்றொரு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க முடியும் என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் முஷாரஃப் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
2001 – 2008 காலகட்டத்தில் பாகிஸ்தானின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
    நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.
    அவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷரஃப் ஆவார்.
    நீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    யார் இந்த பர்வேஸ் முஷாரஃப்?



    1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி டெல்லியில் உள்ள உருது மொழி பேசும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பர்வேஸ் முஷரஃப்.
    1947ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது முஷாரஃப் குடும்பம்.
    ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின் போது ராணுவ தளபதி ஆனார். பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.
    அந்த சமயத்தில் நவாஸின் புகழ் சரிவின் விளிம்பிலிருந்தது. பொருளாதார சரிவு, காஷ்மீர் குழப்பம் என பல்வேறு தளங்களில் நவாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தார். காஷ்மீர் பகுதியில் ஊடுருவி அதனை தனதாக்கிக் கொள்ள பாகிஸ்தான் எடுத்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்து இருந்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள ராணுவம் விரும்பவில்லை.
    முஷாரஃபை ராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க நவாஸ் காய்களை நகர்த்தினார், அதற்கு முன்பு ராணுவத்தின் ஆதரவுடன் நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்தார் முஷாரஃப்.
    bbc

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக