சனி, 18 ஜனவரி, 2020

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு தடை?- மத்திய அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ban-for-ro-systems.hindutamil.in : ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்ஓஅடிப்படையிலான (தலைகீழ் சவ்வூடுபரவல் முறை) தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு (எம்ஓஇஎப்) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை அமல்படுத்த 4 மாதம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சகம் அவகாசம் கோரியுள்ளது.
ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிக்க ஆர்ஓ முறை நாடெங்கிலும் பரவலாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய உத்தரவு
இந்நிலையில் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து தீர்ப்பாயம் மத்திய அமைச்சகத்துக்கு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒரு லிட்டர் குடிநீரில், நீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids) 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்ஓஇயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்த அறிவிப்பாணையை இரு மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பிறப்பித்துள்ளார்.
இந்த வகை ஆர்ஓ முறையால் பெறப்படும் குடிநீர் பொதுமக்களின் சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதை தடை செய்யவேண்டும். இந்த உத்தரவை விரைவாக அமல்படுத்தவேண்டும். 2 மாதங்களுக்குள் தடை செய்வது தொடர்பாக அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் அவகாசம் தேவை
இதையடுத்து இந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த 4 மாத அவகாசம் தேவைப்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் என கோரியுள்ளது. இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்துள்ளஆவணத்தில் கூறும்போது, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கருத்து, ஆலோசனை
அந்த அறிவிப்பாணையை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அனைவருக்கும் தெரியப்படுத்தி, கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்க 2 மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது. மேலும் சட்டம் மற்றும் நீதித்துறையிடமிருந்து ஒப்புதலைப் பெறவேண்டும். எனவே, 4 மாத அவகாசம் இருந்தால் இந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியும். ஆனால் அதே நேரத்தில் 2 மாத கால அவகாசத்திலேயே நாங்கள் அதைச் செயல்படுத்த முயல்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சென்னை குடிநீர் வாரிய அதிகாரி விளக்கம்
இந்த உத்தரவு தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
சாதாரண நீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, பைகார்பனேட் போன்ற பல்வேறு சத்துக்கள் கரைந்துள்ளன. அதன் அடர்த்தியை டிடிஎஸ் என அளவிடுகிறோம். ஒரு லிட்டர் நீரில் கரைந்துள்ள இந்த சத்துக்களின் மொத்த அளவு 500 மி.கி-க்கு குறைவாக இருக்கக் கூடாது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் நீரை சுத்திகரிக்கும்போது, டிடிஎஸ் அளவு 500 மி.கி அளவுக்கு கீழ் சென்றுவிட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நீரை குடிப்போரின் உடலில் எலும்பு உறுதி தன்மை இழத்தல் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். எனவே, எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அந்த இயந்திரங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டிருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக